சென்னை: ரப்பர் ஸ்டாம்ப், ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை கண்ணதாசன் திருடிச் சென்றுள்ளார் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதற்காக தலைவர் பதவியிலிருந்து மன்சூரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் நீக்கினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச் செயலாளர் ஆக குன்றத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்லபாண்டியனால் ஆபிஸ் பாயாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களை படம்பிடித்து கட்சியில் சேர்ந்ததாக காட்டியும், அவ்வப்போது உடன் வருகிறேன், அண்ணா என்று வந்தும் பயன் பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என்று சட்டை அணிந்து வந்ததை கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.
ரப்பர் ஸ்டாம்ப்: சமீபத்தில் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப், ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார். அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மீள் மனு செய்து தேர்தல் ஆணயத்திடம் ஒப்புதல் வாங்கி, விட்டோம். அவர் குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை வேலைக்கு இதனால் தான் யாரும் வைப்பதில்லை. நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில், ஆதரவு திரட்டி வருவதால்... மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும். அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகான் பதிவு: மன்சூர் அலிகான் தனது தமிழ் தேசிய புலிகள் கட்சியை தேசிய அளவிலான இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதிமுகவில் ஒரு தொகுதியை கேட்டும் அக்கட்சிக்கு தான் பிரச்சாரம் செய்வதாகவும் பேசியிருந்தாராம்.
ஆனால் அதிமுகவோ "சீட்டெல்லாம் தர முடியாது, கூட்டணிக்கு பிரச்சாரம் வேண்டுமானால் செய்யுங்கள்" என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து மன்சூர் அலிகான் தனது செய்தியாளர்கள் சந்திப்பில், "அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உடன்பாடு எட்டவில்லை. அதனால் மேலும் இந்த பேச்சுவார்த்தை தொடரும்.
அதிமுக அழைத்தது: அதிமுக அலுவலகத்திற்கு நானாக வரவில்லை. அவர்கள்தான் என்னை அழைத்தார்கள். வேறு ஒரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்றார். அப்போது சரத்குமார் குறித்தும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இரவோடு இரவோடு மன்சூர் அலிகான் அந்த கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என தகவல் கிடைத்தது.
கண்ணதாசன் அறிக்கை: இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
என்ன செய்வார் மன்சூர்?: இந்த நிலையில்தான் கண்ணதாசன் பொதுச் செயலாளரே இல்லை என கூறி மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் மன்சூர் அலிகான் ஆரம்பத்தில் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். பிறகு வேலூர் தொகுதிக்கு மாறியுள்ளார். கூட்டணி படியும் பட்சத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்றும் இல்லாவிட்டால் தனித்தே களம் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.