புத்தாண்டு பலன் 2025: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.. ஆனா இந்த விஷயங்களில் மட்டும் ஜாக்கிரதை

post-img

மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இளகிய மனமுடையவர்கள். கெடுதல் செய்பவர்களுக்கும் சேர்ந்து கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரும் நம்பும் தன்மை கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் அனைத்து பணத் தட்டுப்பாடுகளும் நீங்கும்.
வருடத்தின் தொடக்கத்திலேயே இரண்டில் குரு இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடிய ஆண்டாக அமையும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களில் இருந்தவர்கள், குடும்பத்தோடு வாழ முடியாமல் தவித்தவர்கள் அல்லது கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் பெரிய மாற்றத்தை கடவுள் கொடுக்கவுள்ளார்.

மேஷ ராசிக்கு 2025 இல் மிக முக்கியமாக தெளிவு ஏற்படவுள்ளது. அதாவது, ஆறாவது இடத்தில் இருந்த கேது பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆறாம் இடம் என்பது எதிரி, சத்ரு, ரன ரோக ஸ்தானம் என்று சொல்வார்கள். மறைமுகமாக இருந்து வந்த போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, எதிரிகள் அனைத்தும் விலகக் கூடிய சூழல்கள் ஏற்படும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேஷ ராசிக்காரர்கள் கையில் எவ்வளவு இருந்தாலும் பத்தவில்லை. கடன் வாங்கக்கூடிய சூழல்தான் உள்ளது என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த உங்களுக்கு கடன் சுமைகள் எல்லாமே மாறும். தீர்க்க முடியாத பிரச்னைகள் கூட பனிபோல விலகும் சூழலை 2025 ஏற்படுத்தும்.
அதேபோல, உடல் ரீதியான பிரச்னைகளில் பலர் மாட்டிக் கொண்டிருந்திருப்பீர்கள். மருத்துவரிடம் வைத்தியம் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், மிகுந்த பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது, ஏதாவது நடந்து விடுமோ என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்களுக்கு உடல் நலனில் இருந்த அனைத்து சிக்கல்களும் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

திருமண யோகம்: குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் திருமண பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்த்த வரன் கூடிவரும். காதலிப்பவர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். நீண்ட நாட்களாக காதலை சொல்லலாமா வேண்டாமா என காத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். வீட்டில் காதலை சொல்ல பயப்பட்டு வந்தவர்கள் இந்த ஆண்டு வீட்டில் சொல்லி காதலை வெற்றி அடையச் செய்வார்கள்.
கடன்கள் தீரும்: மேஷ ராசிக்காரர்களுக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்த சனி பகவான் திருக்கணிதப்படி பணிரெண்டாம் இடத்திற்கு வருகிறார். பதினொன்றாம் இடம் லாபத்தில் சனி இருக்கும்பொழுது இருந்து வந்த பணக் கஷ்டங்கள் தீரும். புதிய பண வரவுகள் இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடு செய்திருந்த விஷயங்களில் லாபம் வரும்.
லாப ஸ்தானத்தில் சனி இருக்கும்போது அந்த இடத்தை பாழ்படுத்தக் கூடிய சூழலை கொடுத்திருப்பார். இப்போது பணிரெண்டாம் எனும் மறைவிட ஸ்தானத்துக்கு சனி பகவான் வருகிறார். ராசிக்கு 12 வது இடத்தில் ஏழரைச் சனியாக இருந்தாலும் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று கூறுவார்கள். கெட்ட கிரகங்கள் என்பது கெடு பலன்களைக் கொடுக்க கூடியது. 3, 6, 8, 12 வது இடத்தில் மறையும் போது நல்ல பலன்களைத் தரும்.

லாபம் அதிகரிக்கும்: லாபத்தை கெடுத்த சனி பகவான் ஏழரை நாட்டு சனியாக வந்தாலும் நிச்சயமாக லாபத்தை தருவார். ஏழரை சனி என்பது கெடுக்கக் கூடியது அல்ல. நம்மை பண்டுத்தக் கூடியவர் சனி, பகவான். 12 இல் சனி வரும்போது விரையம் அதாவது செலவுகள் அதிகரிக்கும். அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் அபரிமிதமான லாபத்தை பார்ப்பார்கள். வரும் பணத்தை சுப விரயமாகச் செய்வது நற்பலன்களைத் தரும்.
தூர தேச பிரயாணம், கடல் கடந்து வாணிபம் செய்யலாம். வெளிநாட்டு யோகத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. 2025 இல் லாப ஸ்தானத்தில் ராகுவும் வருகிறார். லாப ஸ்தானத்தில் ராகு வருவதால் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. திடீர் யோகம், திடீர் பண வரவு ஏற்படவுள்ளது. பட்டம், பதவி, பெயர், புகழில் மாற்றம் வேண்டும் நினைத்தவர்களுக்கு நினைத்தபடியே மாற்றங்கள் ஏற்படும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்: ஐந்தாவது இடத்தில் கேது வருவதால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். சிறிய குழந்தைகள் இருந்தால் உடல்நலம், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களாக இருந்தால் வெளி தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் திருமண வாழ்வில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 5 இல் கேது இருந்தால் பிள்ளைகளால் மன உளைச்சல்கள் வர வாய்ப்புள்ளது.
11 ஆம் இடத்தில் லாபத்தில் ராகு வருவதால் ராகு கேதுவால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏழைரைச் சனி திருக்கணித பஞ்சாங்கப்படி ஆரம்பிப்பதால் கொஞ்சம் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. சனி 12 இல் இருக்கும்பட்சத்தில் விரையம் ஒரு பக்கம் இருந்தாலும், சந்திரனுக்கு அருகில் சனி வரும்போதெல்லாம் சஞ்சலம் ஏற்படும். எந்த விஷயம் தப்பு என்கிறதோ அதனை தள்ளிப்போட்டால் மிகச் சிறந்த ஆண்டாக உங்களுக்கு அமையும்.
தொழில்: மேஷ ராசிக்காரர்களுக்கு வருடத்தின் கூட்டுத்தொகை 9வது எண்ணாக வருவதால் நிலம், மண், விவசாயம், கட்டடக்கலை சம்பந்தமான விஷயங்கள் நல்ல பலன்களைத் தரும். ஐடியில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். இயந்திரவியல் துறை நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
மாணவர்கள்: ராசிக்கு இரண்டாவது இடமான வாக்கு, தனம், குடும்பம், கல்வி ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள வெற்றி காண்பீர்கள். நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கு சாதகமாக அமையும். இதற்கு முன்பு தடுமாறிய மாணவர்கள் கூட நல்லவிதமாக படித்து முன்னேறுவார்கள்.
பெண்கள்: பூராடம் நட்சத்திரத்தில் வருடம் பிறப்பிதால் சுக்கிரனுடைய அதிபதியில் தான் பிறக்கிறது. ஒட்டுமொத்தமாகவே 2025 பெண்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையும். மேஷ ராசிக்கு 7 வது இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். பெண்கள் பல துறைகளில் சாதிக்கும் ஆண்டாக அமையும். தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தையும் அனல் பறக்கச் செய்வீர்கள்.
மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்கு முன்னர் தொடும் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். வீடு, கல்யாணம், தொளில் என மே மாதத்துக்குள் அனைத்தும் தொடங்குவது நல்லது. மே மாதத்திற்குப் பிறகு மூன்றாம் இடத்தில் குரு மறைவதால் பழக்கவழக்கங்களில் பிரச்னை, உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, மூன்றாவது நபரால் பிரச்னை ஏற்படக்கூடும். முற்பகுதி பாக்கியத்தையும், பிற்பகுதி விதை போட்டதற்கான பலன்களையும் தரும். மொத்தத்தில் 100க்கு 80 மதிப்பெண் பெற்று அருமையான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

Related Post