சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. ஆதாரங்கள் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி

post-img

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் நிலம் தீட்சிதர்களால் விற்பனை செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வைத்த இந்த கோரிக்கையை ஏற்று கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக கணக்கு காட்டப்படுவதாகவும், அதேவேளையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 வரையிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது கோயிலின் வருவாய் ரூ.3 கோடிக்கு மேல் இருந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியது.

இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில், சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோயிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக அறநிலையத்துறை தரப்பில் குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்து விட்டதாக அறநிலையத்துறை குற்றம் சாட்டியது.
ஆனால், அந்த அறிக்கையில் 20 ஏக்கர் நில விற்பனை குறித்து மட்டும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது என தீட்சதர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை, ''தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலங்களின் பட்டா இன்னும் கோயில் பெயரில்தான் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக 3-ம் நபர்களுக்கு பொது தீட்சிதர்கள் விற்பனை செய்த கூடுதல் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ''கூடுதல் ஆதாரங்களை வழங்க அனுமதி அளிக்கிறோம். கோயிலின் வரவு-செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதீர்களுக்கு 2 வார காலம் அவகாசம் வழங்குகிறோம்’’ என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Post