சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர்- பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் ஒப்பீடு சரியானதே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
எம்ஜிஆர் மோடி ஒப்பீட்டை வரவேற்று எனக்கு அதிமுகவினர் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ள நிலையில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர்- மோடி ஒப்பீடு சரியானதே. எம்ஜிஆர் மோடி ஒப்பீட்டை சரி என கூறி எனக்கு அதிமுகவினர் வாட்ஸ் ஆப்பில் பாராட்டுகிறார்கள்.
அது போல் அதிமுகவினர் என்னை போனில் அழைத்து எனது ஒப்பீடு சரி என கூறினர். எம்ஜிஆரும் மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து உயர்பதவியை அடைந்தனர்.
மோடியின் தாய் 5 வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து அவரை வளர்த்தெடுத்தார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
எம்ஜிஆரின் 37வது நினைவு நாளையொட்டி அவரை வாழ்த்தி பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் எம்.ஜி.ஆர் பெயர் முக்கியமானது.
மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர்.
வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியது. ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிட்டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் பிரதமர் மோடி தான். எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து தங்கள் கடின உழைப்பாலும் மக்கள் மீது கொண்ட அன்பாலும் உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆரின் வாழ்க்கை, ஒரு சகாப்தம்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் நினைவுநாளையொட்டி அவருடைய நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்த வந்திருந்தார். அப்போது அவர் எம்ஜிஆரை பொருத்தமட்டில் அவரை யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர்.
எம்ஜிஆர் ஜாதி, மத வேறுபாடுகளைப் பார்த்தவர் இல்லை. அனைவரும் போற்றக் கூடிய தலைவராக இருந்தார். அதிமுக என்பது ஜாதி, மதம் கடந்து சமத்துவமாக அனைவரையும் பார்க்கும் இயக்கும். எந்த நிலையிலும் எம்ஜிஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடவே முடியாது. மலையை மடுவையும் ஒப்பிடுவது போல் உள்ளது என கண்டனம் தெரிவித்திருந்தார்.