12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ,மஞ்சள் அலர்ட்! கேரளாவில் மழை மேகங்கள்..

post-img

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. கேரளாவை பொருத்த அளவில் பல்வேறு இடங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளரிக்குண்டு, ஹோஸ்துர்க் தாலுகாக்களில் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் தவிர, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல இந்த 12 மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Related Post