100வது வயதில் மலர்ந்த காதல்.. 102 வயது காதலியை கரம் பிடித்த தாத்தா.! திகைத்த பேரக்குழந்தைகள்

post-img

நியூயார்க்: பொதுவாகக் காதல் என்பது ஒருவருக்கு எப்போது யார் மீது வரும் என்றே சொல்ல முடியாது. காதல் என்பது உடல் சார்ந்தது இல்லை. அது மனது சார்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே மதம், வயதைத் தாண்டி எல்லாம் காதல் வரும். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்கா என்பது உலக வல்லரசு நாடுகளில் ஒன்று மட்டும் இல்லை.. பல வினோத சம்பவங்கள் நடக்கும் ஒரு நாடாகும். நீங்கள் கனவிலும் யோசிக்காத பல சம்பவங்கள் நடக்கும் ஒரு நாடு என்றே சொல்லலாம்.
மேலும், அமெரிக்காவில் மறுமணம் என்பது சாதாரணமாக நடக்கும். திருமண வாழ்க்கை செட் ஆகவில்லை என்று விவகாரத்து வாங்கிவிட்டு மறுமணம் செய்து கொள்வார்கள். ஆனால், அங்குள்ளவர்களையே வியக்க வைக்கும் ஒரு மறுமணம் இப்போது நடந்துள்ளது.
வயதான ஜோடி: அங்குள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரை சேர்ந்த ஒரு ஜோடி உலகின் வயதான புதுமணத் தம்பதி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்கு வசிக்கும் 100 வயதான பெர்னி லிட்மேன் என்ற நபர் 102 வயதான மார்ஜோரி ஃபிடர்மேன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் உலகின் வயதான புதுமண தம்பதி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
இந்த தம்பதியின் கூட்டு வயது 202 ஆண்டுகள் மற்றும் 271 நாட்கள் ஆகும். இந்த புதுமண தம்பதியின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் கடந்த டிசம்பர் 3ம் தேதி சேர்க்கப்பட்டது.
காதல் மலர்ந்தது: இவர்கள் இருவருமே பிலடெல்பியா பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு இரவு விருந்தில் தான் இருவரும் முதல்முறையாக சந்தித்துள்ளனர். இருவரும் பேசி பழகவே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பெர்னி மற்றும் மார்ஜோரி இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். அவர்கள் தங்கள் பார்ட்னருடன் சுமார் 60 ஆண்டுகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். இருவரது பார்ட்னர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர்கள் தனிமையில் வாடியுள்ளனர்.
சுவாரசியம்: இதில் இன்னொரு சுவாரசிய விஷயமும் இருக்கிறது. அதாவது இருவருமே இளம் வயதில் அங்குள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் படித்துள்ளனர். இருப்பினும், அவர்கள் இளம் வயதில் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லையாம். ஆனால், விதி அவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்த்துள்ளது.
லிட்மேனின் பேத்தி சாரா சிசெர்மன் இது தொடர்பாகத் தனது ட்விட்டரில், "இன்று எனது 100 வயது தாத்தா தனது 102 வயது காதலியை மணந்தார்.. இருவரும் பிலடெல்பியாவில் உள்ள சீனியர் ஹோமில் வசிக்கிறார்கள். இருவரும் தங்கள் பார்டனர்களை இழந்தவர்கள்.. 100 வயதில் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
திருமண விழா: இவர்களின் திருமண விழா எளிமையாக நடந்துள்ளது. அதில் இருவரின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். யூத முறைப்படி நடந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மணமக்கள் இருவரும் வீல் சேரிலேயே திருமண விழாவுக்கு வந்துள்ளனர்.

Related Post