சென்னை: தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் தரப்படும் என்ற கவர்ச்சி விளம்பரத்தை நம்பி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.. இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ளது.
சென்னை அசோக் நகரில், மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் புகார் மனு தந்துள்ளார்.. அந்த மனுவில் அவர் சொல்லியிருப்பதாவது:
அதிக லாபம்: "மோதிலால் ஓஸ்வாஸ் மற்றும் எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு என்னிடம் சிலர் பேசினார்கள்.. அப்போது 2 நிறுவனங்களின் விவரங்களை இணையதளம் மூலம் காட்டினார்கள்.. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிக லாபம் கமிஷனாக கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
இதை நம்பி 1 கோடியே 65 லட்சத்து 85 ஆயிரத்து 150 ரூபாயை நான், அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தினேன். ஆனால் சொன்னப்படி லாபத்தில் எனக்கு பங்கு எதுவும் தரவில்லை... இதற்கு பிறகு நான் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வங்கி கணக்கு: இந்த புகாரின்பேரில், சைபர் க்ரைம் போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர்.. பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை வைத்து விசாரணையும் துவங்கினார்கள்.. அப்போதுதான், இந்த விவகாரத்தில் 3 நபர்களுக்கு தொடர்புள்ளது தெரியவந்தது..
அதாவது, சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் முகமது இஸ்மாயில், திருப்பூரில் மறு சுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாஹீர், கேசவராஜ், கலீல் அகமது ஆகியோர் ஒன்றாக இணைந்து, அரசு அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்தது உறுதியானது.
முக்கிய மூளை: இதையடுத்து, முகமது அஸ்மாயில், அபுதாஹீர், கேசவராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. இவர்களிடம் விசாரித்தபோதுதான், கலீல் அகமது என்பவரது பெயர் அடிபட்டது.. இந்த கலீல் அகமது கம்போடியாவில் மிகப்பெரிய மோசடி கும்பலிடம் வேலை பார்த்து வருகிறாராம்.. இவர்தான் அனைவருக்கும் மூளையாகவும் செயல்பட்டு வருபவராம். இதையடுத்து, ஏற்கனவே கைதான 3 நபர்கள் மூலம், கலீல் அகமதுவை சென்னைக்கு வரவழைத்து போலீசார் கைது செய்தனர்.
இப்போது மொத்தம் 4 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த 4 பேருமே, கம்போடியாவில் உள்ள மோசடி கும்பலுடன் நேரடியாக தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள்.. தமிழகத்தில் மோசடி செய்யும் நபர்களின் ஏஜென்டாகவும் இவர்கள் பணியாற்றி வந்துள்ளார்கள்.. இவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய டெபிட் கார்டுகள், பேங்க் செக்குகள், செல்போன்கள், லேப்டாக்கள், வங்கி பாஸ் புத்தகங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
தொடர் விசாரணை: ஆனால், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை ஏமாற்றியதை போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. இன்டர்நேஷனல் வரை நெட்வொர்க் விரிவடைந்துள்ளதால், போலீசார் இவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை வலையில் வீழ்த்தும் மோசடி நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளதாக புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.. அதனால்தான், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறும் நிறுவனங்களை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை பலமுறை கேட்டுக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.