மும்பை: நாடு முழுக்க இந்து தலைவர்கள் சிலர் ராமர் கோவில் போன்ற சர்ச்சைகளைத் தேவையில்லாமல் கிளப்புவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தியா இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"விஸ்வகுரு பாரத்" என்ற தலைப்பில் புனேவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விரிவான சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அதன்படி நேற்று நடந்த கூட்டத்தில் அவரது பேச்சில் பல முக்கிய கருத்துகள் இடம்பெற்று இருந்தது.
சில இந்து தலைவர்கள் நாட்டில் வேண்டுமென்ற திட்டமிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குவதாக விமர்சித்த அவர், எந்தவொரு உள்நோக்கத்தோடும் இதுபோன்ற சர்ச்சைகளைப் பரப்பக்கூடாது என்று சாடினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயம் தான் இருக்கிறது. இதன் காரணமாகவே சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நாங்கள் இந்துக்களாக இருப்பதால் மட்டுமே இதை எங்களால் மட்டுமே செய்ய முடிகிறது.
நாங்கள் நீண்ட காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான முன்மாதிரியாக நாம் தொடர்ந்து இருக்க வேண்டும்.. இப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதேநேரம் சிலர் இதேபோல வேறு சில இடங்களில் பிரச்சினைகளைக் கிளப்பி இந்துக்களின் தலைவர்களாக உருவெடுத்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை ஏற்கவே முடியாது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்பது அனைத்து இந்துக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம்.. அதில் எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் திடீர் திடீரென ஒரு சர்ச்சை எழுப்பப்படுகிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. நாம் ஒன்றாக வாழ முடியும் என்பதை உலகிற்கு இந்தியா காட்ட வேண்டும்.
நாடு இப்போது அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குகிறது. இந்த அமைப்பில், மக்கள் தான் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறார்கள். யாரோ எங்கோ அமர்ந்து கொண்டு நம்மை ஆட்சி செய்யும் முறை போய்விட்டது. அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என்பதால் அங்கே ராமர் கோவிலை இந்துக்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கினர். இதனால் பிரிவினைவாதம் உணர்வு தோன்றியது. அதன் விளைவாகவே பாகிஸ்தான் உருவானது.
இங்குச் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று எதுவும் இல்லை.. அப்படி இருக்கும் என்றால் ஏன் அனைவரும் தங்களை இந்தியர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அனைவரும் சமம். இந்த தேசத்தின் பாரம்பரியம் என்னவென்றால், அனைவரும் அவரவர் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம். விதிகள் மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே ஒரே தேவை" என்றார்.
கடந்த சில காலமாகவே நாட்டில் உள்ள பல்வேறு பிறவழிபாட்டுத் தலங்களுக்குக் கீழ் இந்து மத கோயில்கள் இருப்பதாகவும் அதை கண்டறிய சர்வே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படுகிறது. அதை விமர்சிக்கும் வகையிலேயே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.