சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிடம் 20 முதல் 25 தொகுதிகள் வரை கேட்டு பெற விடுதலைச் சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பார் என தெரிகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் பேசிய பழைய வீடியோ வைரலானது. இது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.
அந்த வீடியோவில் "தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை இதற்கு முன்பு யார் யார் வலியுறுத்தினார்களோ தெரியாது, ஆனால், 1999 இல் விசிக முதன்முதலில் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கமே, '' ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'' என்பதுதான். அதிகார பகிர்வு வேறு, சீட் பகிர்வு வேறு... அமைச்சரவையில் பகிர்வு வேண்டும் என்பது பவர் ஷேர், கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர். அதிகாரத்தில் இடம் வேண்டும் என்றால் பவர் ஷேர் வேண்டும்" என இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்த நேரத்தில் திருமாவளவன் போட்ட இந்த பதிவு பூதாகரமானது. இந்த நிலையில் மதுவிலக்கு விவகாரத்தில் திருமாவளவன் தீவிரம் காட்டி வந்ததால் திமுகவை எப்படி அணுக போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பூரண மதுவிலக்கு கோரி திருமாவளவன் நடத்திய மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தது. இதனால் திமுகவுடன் விசிகவுக்கு நல்ல புரிதல் இல்லாமல் போய்விட்டதா என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகி அதிமுக கூட்டணிக்கு போய்விடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் சிலரே வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குள் திமுக கூட்டணி உடைந்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலக போவதில்லை என்றே திருமாவளவனும் கட்சி நிர்வாகிகளும் கூறி வந்தனர்.
இதனிடையே விசிகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனன் கூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து பேசிய போது அவர் மீது திருமாவளவன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுக நிர்வாகிகளின் மனக்குமுறலாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் பேசிய கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் பேசுகையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும். எங்கள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்து போகும் பிற கட்சிகளும் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் வரலாம். அது போல் கூட்டணியில் வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
இது திருமாவளவனுக்கு விஜய்யின் மறைமுக அழைப்பாகவே பார்க்கப்பட்டது. தேர்தலில் வெல்வதற்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் சொல்வதை பலர் கிண்டல் செய்தனர். விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு செல்லும் அளவிற்கு விசிக பலவீனமாக இல்லை என்று திருமாவளவன் மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் திருமாவளவனும் விஜய்யும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் பங்கேற்க மறுத்துவிட்டார். திமுக , திருமாவளவனுக்கு கொடுத்த அழுத்தம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அந்த விழாவில் பேசிய விஜய்யும், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாகவே பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை, அழுத்தம் கொடுத்தாலும் அடிபணிகிற கட்சி நாங்கள் இல்லை என்றும் திருமாவளவன், விஜய்க்கு பதில் அளித்திருந்தார்.
அதே விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய போது , வரும் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பேசியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடம் இருந்தது.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவரும் கட்சியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை விசிக உயர்த்தி மாவட்ட கிளை கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
ஓபிசி மக்களையும் பெண்களையும் கட்சியில் இணைக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் ஒற்றை இலக்கத்தில் சீட்டை பெற்றால் அது தொண்டர்களின் உழைப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் இந்த முறை 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாம். அதாவது 20 முதல் 25 சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என்ற தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனிடம் கோரிக்கை வைப்பர் என தெரிகிறது. அதே வேளையில் எத்தனை சீட்டுகளை பெற வேண்டும் என்பதை திருமாவளவன்தான் முடிவு செய்வார். அவர் எத்தனை பெற்றாலும் ஏற்றுக் கொண்டு கூட்டணி வெற்றிக்கு பாடுபட சிறுத்தைகள் தயாராக இருக்கிறார்களாம்.