ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.. திருமாவளவன்

post-img

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்காக விசிக சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கென ரூ. 10 லட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 1 ஆம் தேதி புதுவை அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது, பலத்த சூறாவளி காற்றுடன் அதி கனமழையாக கொட்டியது. இதனால், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீட்டர் மழை கொட்டியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மூன்று மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் வழங்கி வருகிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தனிடம் அளித்தார். அதேபோல் திமுக எம்பிக்களும் தலா ரூ1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் ரூ.10 லட்சம் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில்பதிவிட்டுள்ளதாவது:-

அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் #விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Post