AC மிஷினில் கூலிங்.. பானசோனிக் ஏசி மாட்டியதுமே.. கோர்ட்டுக்கு ஓடிய கஸ்டமர்.. நீதிபதி சொன்னதை பாருங்க

post-img
சென்னை: புதிய ஏசியை கவர்ச்சிகரமாக பேசி வாங்க வைத்துவிட்டதாகவும், அதை கொண்டுவந்து வீட்டில் மாட்டியதுமே ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், சென்னை நபர் புகாருடன் ஒருவர் கோர்ட்டுக்கு ஓடியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்பு, சென்னை திருவான்மியூரை சேர்ந்த நவீன்ராம், எல்.பி., சாலையில், வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில், 44500 ரூபாய்க்கு, 1.5 டன் திறன் உடைய, ஏசி மிஷின் ஒன்றை வாங்கியிருந்தார். ஆனால், இந்த ஏசி வாங்கி ஒரு வருடத்துக்குள் கூலிங் மிக குறைவாக இருந்தது. உதிரி பாகங்கள் சிலவற்றிலும் கோளாறு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட, சேவை நிறுவனத்திற்கு புகார் தெரிவித்து, பழுது பார்க்கப்பட்டும் கோளாறு சரி செய்யப்படவில்லை. வாரண்டி: இதனால், வாரண்டி உத்தரவாத காலக்கெடுவுக்குள், ஏசி மிஷின் பழுதடைந்தால், புதியது வழங்க வேண்டும் அல்லது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உரிய சேவை வழங்கப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஏசி தயாரிப்பு நிறுவனம் பதிலளித்திருந்தது. இறுதியில், நீதிபதி லட்சுமிகாந்தம், நீதித்துறை உறுப்பினர் ஜெயந்தி இருவரும், 'சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, புதிய ஏசி மிஷின் அல்லது 44500 ரூபாயுடன், இழப்பீடு, 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என மொத்தம் ரூபாய் 99,500 ரூபாய், ஏசி விற்பனை நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு அப்போது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. வழக்கு மனு: இந்நிலையில், இதே சென்னையில் மீண்டும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த, ரவி ராகுல் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில், பெரம்பூர் கோல்ட் பாயின்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில், 2022 பிப்ரவரி, 5ம் தேதி, ரூ.35,000 மதிப்பில், ஒரு டன், ஏசி மிஷினை வாங்கினேன். அதாவது, கடை ஊழியர்கள் கவர்ச்சிகரமாக பேசி, பானசோனிக், ஏசியை என்னை வாங்க வைத்துவிட்டனர். வீட்டில் அதை நிறுவியது முதல் சரியாக இயங்கவில்லை. பானசோனிக்: தொடர் பழுதால் கோடை காலத்தில், ஏசியை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்ததும், பானசோனிக் நிறுவன அதிகாரப்பூர்வ ஊழியர்கள், வீட்டுக்கு வந்து பழுதை சரி செய்தார்கள்.. இருந்தாலும் மறுபடியும் ரிப்பேர் ஆகிவிட்டது.. தயாரிப்பு குறைபாடு உடைய, ஏசி என்பதால்தான், ஆரம்பத்திலிருந்தே பழுது வந்துவிட்டது. சந்தையில் பொருளை விற்கும் முன்பு, உரிய ஆய்வு செய்திருக்க வேண்டும். உற்பத்தி குறைபாடுடைய பொருளை விற்றதுடன், சேவை குறைபாடுடன் நிறுவனம் நடந்துள்ளது. எனவே, நியாயமற்ற வணிகத்தில் ஈடுபட்டு, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனம், அந்த பொருளை விற்ற கடை ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பொருளுக்கு நான் செலுத்திய, 35,000 ரூபாயை, 12 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும். பழுதான, ஏசியால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ஒரு லட்சம், வழக்கு செலவாக 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள் தீர்ப்பு : இம்மனுவை, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு இதுதான்: மனுதாரர், ஏசி வாங்கியது முதல் சரிவர இயங்கவில்லை. பொருளுக்கான உத்தரவாதம் காலத்தில், அடிக்கடி ஏற்பட்ட பழுது குறித்து புகார் அளித்திருக்கிறார்.. அதிகாரப்பூர்வ பழுது நீக்கும் ஊழியர்களும், அதனை சரி செய்து தந்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் பழுதை சரி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. பழுதான பொருளுக்கு பதில் புதிய பொருள் வந்ததாக கூறி, மனுதாரரை அழைத்த போது, அவர் பெற மறுத்தார் என, நிறுவனம் தரப்பு அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. உத்தரவு: தொடர் பழுதால் ஒரு கட்டத்தில், பொருளை உற்பத்தி செய்த நிறுவனம் மற்றும் விற்றவர் மீதான நம்பிக்கையை புகார்தாரர் இழந்து விட்டார். தயாரிப்பு குறைபாடுள்ள, ஏசி வழங்கியதன் வாயிலாக, சேவையில் குறைபாடு உள்ளது தெளிவாகிறது. எனவே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, பொருளுக்கான தொகையான, 35,000 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அத்துடன், சேவை குறைபாடுக்கு 10,000, வழக்கு செலவாக 5,000 ரூபாயையும் பானசோனிக் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Related Post