“இந்தியா உலகிற்கு யுத்தத்தை தரவில்லை.. புத்தரை தந்துள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்..!

post-img

உலகளாவிய புத்த மத உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமும், சர்வதேச புத்த மத கூட்டமைப்புமும் இணைந்து இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. “சமகால சவால்களுக்கு பதில்: தத்துவத்திலிருந்து நடைமுறைக்கு” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, "நூற்றாண்டு காலமாக புத்தரின் சிந்தனையானது கணக்கிட முடியாத மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தரின் சிந்தனைகளை பின்பற்றும் நபர்களின் நம்பிக்கையும் உறுதியும் உலகிற்கு பலமாக உள்ளது. உலகிற்கு இந்தியா யுத்தத்தை தரவில்லை. மாறாக புத்தரை தந்துள்ளது. போரை துறந்து அமைதியின் மார்க்கத்தை ஏற்க வேண்டும் என புத்தர் கூறிய கருத்து தற்கால உலகிற்கும் பொருந்துபடியாக உள்ளது.

புத்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய நல்வாழ்வு திட்டங்களை முன்னெடுக்க இந்தியா தயாராகி வருகிறது. புத்தரின் சிந்தனைகள் என்றும் அழியாதது, காலத்தால் மறக்க முடியாத ஒன்று. பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்வு கான புத்தர் சிறந்த வழிகாட்டி. அனைத்து மானுடர்களின் துயரங்களையும் தனது துயரமாக இந்தியா கருதுகிறது. வெற்றி, தோல்வி, சண்டை, போர் ஆகியவற்றை துறந்தால் தான் உலகம் மகிழ்ச்சியை தழுவ முடியும்" எனப் பேசினார்.

 

இந்த இரு நாள் நிகழ்வில் புத்த மதமும்-அமைதியும், புத்தமதத்தின் அடிப்படையில் நீடித்த சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரம், நாளந்தா புத்தமதப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், புத்த தம்ம யாத்திரை, உயிரோட்டமான பாராம்பரியம் மற்றும் புத்தர் நினைவுச் சின்னங்கள்  ஆகிய கருப்பொருட்களின் அடிப்படையில் விவாதங்கள் இடம் பெறவுள்ளன.

Related Post