பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இதனால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறினார்.
ஆளுநரின் இந்த உத்தரவுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நிறுத்தி வைப்பு:
இந்நிலையில், ஆளுநரின் முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் ரவி, அட்டர்ஜி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதால், அதுவரை, செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பார். இதனை முதல்வருக்கு மற்றொரு கடிதம் வாயிலாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.