டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட கோரி மேலூர் அரிட்டாபட்டியில் இன்றும் மக்கள் போராட்டம்!

post-img
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதைக் கண்டித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராம மக்கள் இன்றும் தொடர் போராட்டம் நடத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி. இந்த பகுதியில் நீண்டு பரந்து விரிந்து கடக்கும் குன்றுகள், மலைகள் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மலைகளில் சமணர் சிற்பங்கள், குடைவரை சிவன் கோவில் மற்றும் தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இத்தகைய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி மலைப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது. இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரிட்டாபாட்டியில் இருந்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன்னர் நடைபயணம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்றும் அரிட்டாபட்டி சுற்று வட்டார கிராம மக்கள் அரிட்டாபட்டியில் ஒன்று கூடி கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Related Post