மும்பை: வேறு வேறு மதத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், 20 வயது இளைஞரும் திருமணம் செய்ய முடியாத சூழலில், நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.. மும்பை ஹைகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 19 வயதாகிறது.. இவர் பெண் 20 வயது இளைஞரை தீவிரமாக காதலித்து வந்தார்... இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்த பெண், தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இளைஞரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம்: திருமண வயது 21 என்பதால், இளைஞரால் அப்பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை. அதனால், 21 வயதானதுமே, 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆனால் இதற்குள், பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார்கள்.. காதலர்கள் 2 பேருமே வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாம். எனவே, இதில் சில மத அமைப்புகளும் தலையிட்டு பெண்ணின் பெற்றோருக்கு நெருக்கடி தந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து, போலீஸார், காதல் ஜோடியை அழைத்து பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள்.
பெண்கள் முகாம்: அப்போது, இளைஞருக்கு 21 வயது இன்னும் ஆகவில்லை என்பதால், பெண்ணை அவரிடமிருந்து மீட்டு, பெண்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போலீசாரின் இந்த முடிவை இளைஞர் எதிர்த்தார்.. தன்னுடைய காதலியை விடுவிக்க வேண்டும் என்றும், தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும், மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி பாரதி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கறார் முடிவு: அவரிடம் நீதிபதிகள் சமாதானம் பேசிப்பார்த்தார்கள். ஆனால், காதலனுக்கு 21 வயதாகும் வரை அவருடனேயே லிவ் இன் முறையில் வாழ விரும்புவதாகவும், தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். இதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இறுதியில், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொல்லும்போது, "இளைஞரும், இளம்பெண்ணும் இணைந்து வாழலாம். இவர்கள் இருவரும் தங்களது துணையை தேர்ந்தெடுக்க சட்டம் கொடுத்திருக்கும் உரிமையில் எங்களால் தலையிட முடியாது. அவர்கள் சேர்ந்து வாழ்வதை சட்டத்தாலும் பிரிக்கவும் முடியாது. அதனால், பெண்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை அங்கிருந்து விடுதலை செய்ய வேண்டும்..
அதிரடி உத்தரவு: அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி வாழலாம். இந்த விவகாரத்தின் பெண்ணின் பெற்றோரின் கவலைகளை நாங்கள் உணர்கிறோம்.. ஆனால் அப்பெண்ணின் விருப்பத்தில் எங்களால் தலையிட முடியாது" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.