சென்னை: அதிமுக இயக்கத்தை எடப்பாடியால் வழிநடத்த முடியாது என்று 10 தேர்தலிலும் உறுதியாகிவிட்டது. 10 வாய்ப்புகளும் அவருக்கு தந்தாகிவிட்டது. என்னை பொறுத்தவரை தன் அரசியலை எடப்பாடி இழக்க தொடங்கிவிட்டார். அவர் நடத்தியிருக்கும் கடைசி பொதுக்குழுவாகத்தான் இதை பார்க்கிறேன் என்று மூத்த அதிமுக தலைவர் மருது அழகுராஜ் கூறியிருக்கிறார்.
சென்னை வானகரத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது.. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அடித்தளமாக அதிமுக பொதுக்குழுக் கூட்டம் அமையுமா? முக்கிய முடிவுகள், அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் எழுந்தன.
அதேபோல பல்வேறு அதிருப்திகளும் இந்த கூட்டத்தில் வெடிக்கும் என்று எதிர்தரப்பினர் கணிப்புகளை கூறியிருந்தனர். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. எடப்பாடிக்கு கோலாகல வரவேற்பு அளித்து, தடபுடல் விருந்துடன் பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது.
மருது அழகுராஜ்: இப்படிப்பட்ட சூழலில், மூத்த தலைவரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் மருது அழகுராஜ் பேட்டி ஒன்றை நம்முடைய "ஒன் இந்தியா தமிழுக்கு" தந்துள்ளார். இந்த பேட்டியில், அதிமுக பொதுக்குழு குறித்தும், அதிமுக பாஜக கூட்டணி அமையுமா? அப்படி கூட்டணி அமைந்தால் விஜய்யுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பாரா? என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருது அழகுராஜ் தந்த பதில்களின் சுருக்கம்தான் இது:
அதிமுகவுக்குள் நிர்வாகிகளின் அதிருப்திகளும், எதிர்பார்ப்புகளும் வெடிக்கும் என்று நாங்களும் எதிர்பார்த்தோம். அதன்படியே அதிருப்தியாளர்களும் பொதுக்குழுவுக்கு வந்தார்கள்.. ஆனால் அவர்கள் அமைதியாக்கப்பட்டுவிட்டார்கள்.. பணம்தானே ஒருவரின் வாயை அடைக்கும்? ஒன்றிரண்டு பேர் பேச வேண்டும் என்று நினைத்தார்கள்.. ஆனால், அதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
அன்வர் ராஜா: மூத்த சட்டமன்ற உறுப்பினரும், 9 முறை வெற்றி பெற்றவருமான செங்கோட்டையனுக்குகூட பேச வாய்ப்பு தரவில்லை.. அன்வர் ராஜாவுக்கும் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. நன்றியுரையை மட்டும் தங்கமணி சொல்கிறார். ஆனால், அதுக்குள்ளே பின்னாடியிருந்து பிரியாணி வாசம் அடிக்குது.
எல்லாரும் எதிர்பார்க்கும் கூட்டணியாக அமையும் என்று எடப்பாடி சொல்கிறார்.. இதைதேதான் எம்பி தேர்தலுக்கு முன்பும் சொன்னார்.. அந்த தேர்தல் வேறு, இந்த சட்டமன்ற தேர்தல் வேறு என்று சொல்றார்.. எம்பி தேர்தலில் போட்டியிட்டவர்கள் எல்லாம் கடனாளி ஆயிட்டாங்களே, தொண்டர்களின் உழைப்பை ஏன் வீணாக்கினாரு? எடப்பாடி 2026வரை இப்படித்தான் சொல்லிட்டு இருக்கணும்.. ஒன்றுபடாத அதிமுகவை நம்பி ஒரு கட்சியும் கூட்டணிக்கு வராது.
தை பிறந்தால்: ஜனவரி மாதம் டூர் வர்றதா சொல்றாரு.. பொதுவெளியில் மக்களையும், தொண்டர்களையும் சந்திக்கும்போது, இவர்களே எடப்பாடிக்கு பாடம் புகட்டுவார்கள்.. அவ்வளவு நாள் எதுக்கு? தை பிறந்தால் வழி பிறக்கும் பாருங்க.. இந்த அதிமுக இயக்கத்தை எடப்பாடியால் வழிநடத்த முடியாது என்று 10 தேர்தலிலும் உறுதியாகிவிட்டது. 10 வாய்ப்புகளும் அவருக்கு தந்தாகிவிட்டது. என்னை பொறுத்தவரை தன் அரசியலை எடப்பாடி இழக்க தொடங்கிவிட்டார். அவர் நடத்தியிருக்கும் கடைசி பொதுக்குழுவாகத்தான் இதை பார்க்கிறேன்.
அதிமுக வெற்றி பெற வேண்டும், அதிமுக நல்லா இருக்கணும் என்பதற்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியது இன்றுவரை தொண்டர்களுக்கு வருத்தத்தை தந்து கொண்டிருக்கிறது. செம்மலை ஒரு பேட்டியில் சொல்கிறார், ஏன் தோற்றுகொண்டே கம்யூனிஸ்ட் கட்சி வாழலியா? காங்கிரஸ் கட்சி வாழலியா என்கிறார்? 31 வருடம் தமிழகத்தை ஆண்ட இயக்கத்தை, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியாக மாற்றுவதுதான் இவர்களது லட்சியமா?
எடப்பாடி டிரைவர்: எடப்பாடி தன்னை திருத்தி கொள்ளாவிட்டால், அவரை தவிர்த்து எல்லாரும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்.. ஆனால் எடப்பாடியின் டிரைவர்கூட அவர் பின்னாடி போவாரா? என்பது சந்தேகம்தான்.
திமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரையும் கூப்பிட்டு கேளுங்கள், "எடப்பாடி இருந்தாலே நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்" என்று சொல்கிறார்கள்.. அதெப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்று திமுகவினரை கேட்டால், "எடப்பாடி கட்சியை ஒன்றுபட விடமாட்டார்.. எங்கள் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்வரை, அதிமுக ஒன்றுபடாமல் பார்த்து கொள்வார். அதற்கான உத்தரவாதத்தை எடப்பாடி எங்களுக்கு தந்திருக்கிறார். அவர்மீது எந்த வழக்குகளும் முன்னெடுக்கப்படாது.. கொடநாடு வழக்கு தொட்டிலில் தூங்க வைக்கப்படும், அவரது சம்பந்தி வழக்கு கோமாவில் கிடத்தப்படும். அவர்மீது எந்த நடவடிக்கையும் திமுக எடுக்காது" என்கிறார்கள்.
ஸ்டாலின்: நீங்களே பாருங்க, "90 நாட்களில் குற்றவாளிகள் என்று நிரூபிப்போம்" என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் சொன்னாரே? எடப்பாடி வீட்டுக்கு இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை, ஒரு சோதனைகூட நடத்தியதில்லையே? எடப்பாடியை திமுக பொத்தி பொத்தி பாதுகாக்குது.
தினகரன், சசிகலா, ஓபிஎஸ், என்னை போன்றவர்களை எல்லாம் எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். இத்தனைக்கும் நான் அதிகமாக உழைத்தது எடப்பாடிக்குதான்.. இது அவரது மனசாட்சிக்கு தெரியும்.
இன்னைக்கு திருநெல்வேலியில் வெறும் 8 சதவீதம் வாக்குகள்தான்.. ராமநாதபுரம், தேனியில் டெபாசிட்டே போச்சு.. அதிமுக பிறந்த இடம், இரட்டை இலை உதயமான இடம் என்று சொல்லக்கூடிய திண்டுக்கல்லில் வெறும் 4 லட்சம் ஓட்டுக்கள்தான்.. திருச்சி முதல் தாமிரபரணி நதிக்கரைவரை அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளதற்கு யார் காரணம்? ஒரே ஒரு குருக்கள் வர்றார் என்பதுபோல, தென்மாவட்ட உதயகுமார் மட்டுமே வர்றாரு
பேரழிவு: பாஜகவுடன் அதிமுக ஒன்றிணைந்தால்கூட, எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை.. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிறுபான்மை ஓட்டுக்களை பெறு காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்கிறதோ, அதுபோல, பெரும்பான்மையான, அனைத்து சமூக மக்களின் பெறுவதற்கு பாஜகவுடன் கூட்டணியை தவிர்த்தால், அது அதிமுகவுக்கு பேரழிவையே தரும். அப்படி பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், நாங்கள் விஜய்யுடன் கூட்டணி வைப்போமா? என்று யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
ஆனால், ஒரு அரசியல் இயக்கம் தோற்றுவிக்கும்போதே, "நான் ஆட்சியை பிடிப்பேன், என்னை நம்பி வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன்" என்று சொன்ன முதல் கட்சியாக விஜய்யின் கட்சியை பார்க்கிறேன். த
விஜய் கட்சி: தமிழ் தேசியம், திராவிட தேசியம் இரண்டையும் ஒன்றாக கருதுகிறார்.. பகவத் கீதை, பைபிள், குரான், அரசியல் சாசன புத்தகங்கள் அனைத்தையும் தன்னுடைய நெஞ்சில் சேர்த்து அணைத்து கொண்டு நடந்து செல்கிறார். இப்படி சரியாக போகும் இளைஞரை நான் ஏன் விமர்சிக்கணும்? நல்லதை ஏற்கிறேன்.
அப்படி விஜய்யுடன் போவதாக இருந்தால் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு போவேன். எனக்கான சுதந்திரத்தை ஓபிஎஸ் தந்திருக்கிறார்.. என் நிலையை கண்டித்ததோ, எதிர்த்ததோ இல்லை.. என்றைக்கும் என்னை ஆதரிக்கக்கூடியவர்தான்" என்றெல்லாம் தெளிவுபடுத்தியிருக்கிறார் மருது அழகுராஜ்.