அம்பேத்கர் பற்றிய நூலை வெளியிட்ட விஜய் இன்னும் ஏன் அமித் ஷாவை கண்டிக்கல.. கொளுத்திப் போட்ட விசிக!

post-img
சென்னை: அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்பேத்கர் பற்றிய நூலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமித்ஷாவை கண்டிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார் விசிக நிர்வாகி வன்னி அரசு. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருவதையும் விமர்சித்தார். அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் கூறினார் அமித் ஷா. அமித் ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததற்காக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும், அமித் ஷா பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தமிழக அரசியல் கட்சிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புரட்சியாளர்அம்பேத்கர் யாத்து தந்த இந்திய அரசியலமைப்புச்சட்டம் தான் நாடாளுமன்றத்தை வழிநடத்துகிறது. அந்த நாடாளுமன்றத்துக்குள்ளேயே புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சரும் சனாதனவாதியுமான அமித்ஷா. அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டை பெருமையோடு கொண்டாடுவதாக சொல்லி பெருமைப்படும் பிரதமர் மோடியோ இது குறித்து இதுவரை கண்டிக்கவே இல்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கவாவது சொல்லியிருக்க வேண்டும். இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் அதிமுகவோ பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கண்டிக்கக் கூட இல்லை. அது கூட போகட்டும், கடந்த டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் இதுவரை அமித்ஷாவை கண்டிக்கவில்லை. எல்லோரும் அமித்ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதுவே புரட்சியாளர் அம்பேத்கரை மதிப்பதாக பொருள். இல்லையேல், அடையாள அரசியலை செய்வதாகத்தான் மக்கள் புறக்கணிப்பார்கள்" என வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, விஜய் உடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், விசிக முன்னாள் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, "அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும். ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும், எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம். எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்." என்று கூறியுள்ளார்.

Related Post