சென்னை: சென்னை நங்கநல்லூரில் மழை நீர் வடிகால் திறந்து கிடந்த நிலையில், பால் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. குறிப்பாக நங்கநல்லூர், மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் போர்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் காரணமாக பல்வேறு சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.. அண்மையில் பெய்த மழை காரணமாக மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு பக்கம் சாலைகளும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில் மழைநீர் வடிகால பணிகள் நடந்து வரும் இடங்களில் விபத்து அபாயமும் உள்ளது. மழை நீர் வடிகால் பணி முடிந்து சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அந்த சாலைகள் போட்ட ஒரே மாதத்தில் மோசமான நிலையை எட்டி உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மடிப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தான் குறிப்பிட்ட தூரத்திற்கு சாலை அமைத்தார்கள். அதற்குள் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு பயணிக்கவே லாயக்கு இல்லாத நிலையை எட்டி உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதேபோல் மடிப்பாக்கம், நங்கநல்லூரில் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, சாலைகள் பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது ஒருபுறம் எனில் வடகிழக்கு பருவ மழை வந்தால் நிச்சயம் வெள்ள அபாயமும் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ரயிலுக்குள் கொட்டிய அருவி.. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் கசிந்த மழைநீர்.. பயணிகள் அவதி! வீடியோ
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 14ல் 185வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் 18வது தெருவில் உள்ள மழை நீர் வடிகால் திறந்து கிடந்தது. இந்த நிலையில் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (84) என்பவர் நேற்று முன்தினம் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பி உள்ளார்.
அப்போது ஜெயராஜ் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி மழை நீர் வடிகால்வாயில் விழுந்துவிட்டார்.இதில் ஜெயராஜின் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு முதியவர் ஜெயராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். திறந்த நிலையில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சென்னை நங்கநல்லூர் மடிப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage