சென்னை: போக்குவரத்து பிரச்சினைகள் எதுவும் இன்றி ஈஸியாக பயணித்த தென் சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் பணிகளால் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு சென்று வருவது பெரும்பாடாகி விட்டது. எந்த பக்கம் போனாலும் கேட் தான். டேக் டைவர்சன்.. அந்த பக்கம் போய் யு டர்ன் போடுங்க என்று போர்டு வைத்துள்ளதால் கொளுத்தும் வெயிலுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியாமல் போக்குவரத்து நெரிசலில் தினம் தினம் சிக்கித் தவிக்கின்றனர் தென் சென்னை பகுதி வாகன ஓட்டிகள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை இயக்கப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ), மாதவரம் - சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன. மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் ஒரு பக்கம் நடைபெறுவது நல்ல விசயம்தான் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என்றாலும் தற்போது பணிகள் நடைபெறும் பல பகுதிகளில் இரும்பு தட்டிகளால் அடைக்கப்பட்டு ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அது தவிர தினம் தினம் போக்குவரத்து மாற்றம் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடங்களுக்குக் கூட அரை மணி நேரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால் டாக்சிகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவசரத்திற்கு புக் செய்தால் கூட வர யோசிக்கின்றனர்.
மயிலாப்பூர் ராயப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை - வலது - நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் - ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீலகிரிஸ் கடை - மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை - வலது - டிடிகே சாலை - கௌடியா மட சாலை வரை செல்லும்.
வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.
அஜந்தா சந்திப்பில் இருந்து அதிமுக அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை போக்குவரத்து மாற்றம்: ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் - வலது லஸ் சர்ச் சாலை- டி சில்வா சாலை - பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை - இடதுபுறம் திரும்பி - சி.பி ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ஆர்.கே.மட சாலையில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் - ரங்கா சாலை - வலது - கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ - லஸ் சர்ச் சாலை வழியாக - பி.எஸ்.சிவசாமி சாலை - வலது - சுலிவன் கார்டன் தெரு - இடது - ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.
கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.
மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் மாநகர மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை - இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.
ஆர்கே மடம் சாலை திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை: வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி - செயின்ட் மேரிஸ் சாலை - இடதுபுறம் திரும்பி - சிபி ராமசாமி சாலை - காளியப்பா சந்திப்பு - நேராக ஆர் ஏ புரம் 3 வது குறுக்குத் தெரு சென்று - காமராஜர் சாலை - சீனிவாசா அவென்யூ - கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட சாலை - இடது - திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் - வி.கே. ஐயர் சாலை - தேவநாதன் தெரு - வலது - செயின்ட் மேரிஸ் சாலை - இடது - ஆர். கே மட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மந்தைவெளி செல்லும் மாநகர பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் - செயின்ட் மேரிஸ் சாலை - வலதுபுறம் திரும்பி - சிறுங்கேரி மட சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.
சீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
ஒஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலது புறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் "யு" டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்குச் செல்லலாம்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் "யு" டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னையின் பல பகுதிகளில் திடீர் திடீர் என போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியிடுவதால் வாகன ஓட்டிகளின் பாடு பெரும்பாடாக உள்ளது. அலுவலகம் செல்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பினால்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிக்க முடியும். கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரிக்க, போக்குவரத்து மாற்றமும் வாகன ஓட்டிகளை டென்சன் ஆக்கி வருகிறது.