சென்னை: மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல் தமிழக அரசு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள இணைப்புக் கட்டணம் நிலுவையில் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அலுவலக வேலைகளை சரிவரச் செய்ய முடியாமல் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளதாகவும், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பு பணியிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.
திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீதம் நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?. திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுவரை எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் கட்டணம் கட்டாமல் நிலுவையில் இல்லை. ஆசிரியர் சம்பளப் பிரச்னை, இணைய சிக்கல்கள் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. சம்பளம் நிலுவை குறித்து எந்த ஆசிரியரும் தகவல் தெரிவிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஒன்றிய அரசு சுமார் 2,151 கோடி ரூபாய் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலுவையோ, எந்த கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.