சென்னை: சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். பெரியாரின் நினைவைப் போற்றுவோம் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பெரியார் வழிநடப்போம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 51-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும் பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம்- ஆய்வு மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று! 'மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு' என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!
சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம். பெரியாரின் நினைவைப் போற்றுவோம்
அமைச்சர் கே.என். நேரு: மானமும் - அறிவும் மனிதருக்கு அழகு என சுயமரியாதை கோட்பாட்டை இம்மண்ணில் விதைத்து தமிழ்நாட்டை என்றென்றும் வழி நடத்தும் "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்" நினைவு நாளில் அவர் புகழ் போற்றுவோம். சாதி - பேதமற்ற சமுதாயம் தழைக்க தந்தை பெரியாரின் வழியில் நடைபோடுவோம்.!
திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்: சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தை தொடங்கி, அனைத்து சாதி, பாலின மக்களுக்கும் சம உரிமையை பெற்றுத்தந்த, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது புகழினைப் போற்றி வணங்குவோம். காவிக் கறை படிய முயலும் இந்த தேசத்தில், கருப்பாய் ஒளிரும் மண், இப் பெரியார் மண் !
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்: சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர். கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்.