சென்னை: சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்.
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசியுள்ளார்.
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் இன்று திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும்தான் திராவிட மாடல். திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில்.
வழிபாடும், இறைவனை வணங்குவதும் அவரவர் விருப்பம். எந்த மதமாக இருந்தாலும் அது அன்பையே போதிக்கும். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இந்தியா வளரும். மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை தூண்டி பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்குதான் நாங்கள் எதிரி.
ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களில் எந்த அரசியல் பேசுகிறோம் என்பது மக்களுக்குப் புரியும். எந்த நோக்கத்திற்காக உழைக்கிறோம் என்பதை அது வெளிப்படுத்தும். திமுக அரசு எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக திகழும்.
இந்தியாவில் பிளவுவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையை மக்கள் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் திருந்தவில்லை. சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அது தான் வருத்தமாக இருக்கிறது.” எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனிதப்பயணம் செல்வோருக்கு ரூ.37,000 நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.” என கிறிஸ்துவ மக்களுக்கான திட்டங்களைப் பட்டியலிட்டார்.