சென்னை: சென்னையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கான முக்கிய காரணத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் தான் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் ஏஆர்ரஹ்மானின் கான்சர்ட் கடந்த மாதம் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 10ம் தேதி மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள் பனையூர் வந்தனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சில குறைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிக விலை கொடுத்து வாங்கியவர்களின் இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்துள்ளனர். அதோடு இடநெருக்கடி ஏற்பட்டதோடு, கார் பார்க் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இத்தகைய குறைபாடுகளால் ஏராளமான ரசிகர், ரசிகைகளால் இசை நிகழ்ச்சியை காண முடியவில்லை. அதோடு கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உருவானது.
இதனால் டிக்கெட் எடுத்த பலரும் உயிர் பயத்தின் காரணமாக வீட்டுக்கு சென்றனர். அதோடு ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் சரியாக செய்யவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. அதேபோல் ஏஆர் ரஹ்மானும் வருத்தம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறினார். தற்போது டிக்கெட் கட்டணம் என்பது திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க அன்றைய தினம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் என்பது இரவு வரை நீடித்தது. முதல்வர் ஸ்டாலினின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணையை தொடங்கினர்.
ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சி நடந்த இடம் என்பது தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் வருகிறது. இதனால் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டார். அப்போது இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் முறையாக பெறப்பட்டதா? கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு என்ன காரணம்? டிக்கெட் விற்பனையில் பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? என்பது பற்றி விரிவாக விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது சென்னையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சி தொடர்பாக காவல் துறையிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. அந்த கடிதத்தில் நிகழ்ச்சிக்கு மொத்தம் 20 ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் கடிதத்தில் இருப்பது போல் 20 ஆயிரம் பேருக்கு மட்டும் டிக்கெட் விற்பனை செய்யவில்லை. மாறாக 41 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது போலீசிடம் கூறியதை விட 21 ஆயிரம் அதிகமாகும். இதனால் தான் இசை நிகழ்ச்சி தொடர்பாக இடநெருக்கடி ஏற்பட்டு குளறுபடி உருவானது தெரியவந்தது. இந்நிலையில் தான் அனுமதிக்கப்பட்டதை விட ஏராளமானோர் கூடியது தொடர்பான பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.