கோவையில் நிர்மலா சீதாராமனுக்கு இதுவரை இல்லாத செம்ம மாஸ் வரவேற்பு- தமிழ்நாடு பாஜக

post-img

கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். கூடை கூடையாக பூக்களை தலையில் கொட்டி அப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பை இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு பாஜக கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்தார். அதிமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் அண்ணாமலையை டெல்லி வர சொல்ல் பாஜக மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு: இதனையடுத்து டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்தித்ததாக படங்கள் வெளியாகவில்லை. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த படங்கள் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இதனையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஷேர் செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டு தொழில் திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசியதாக அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
நிர்மலா சீதாராமன் அறிக்கை: அதேநேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் டெல்லி மேலிடம் அறிக்கை கேட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பாஜக மேலிடம் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்கிறது எனவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் சந்திப்பும் இது தொடர்பாகத்தான் எனவும் தகவல்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்?: அத்துடன் தமிழ்நாடு பாஜகவுக்கான மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் எனவும் டெல்லி பத்திரிகையாளர் வட்டாரங்களிடையே ஒரு தகவல் பரவியது. தற்போது தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளராக பிஎல் சந்தோஷ் இருந்து வருகிறார். அவர் மாற்றப்பட்டு நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
திகட்ட திகட்ட வரவேற்பு: இப்படியான தகவல்கள் வலம் வந்த நிலையில் டெல்லியில் இருந்து நேற்று இரவு கோவை வருகை தந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக மகளிர் அணியினர் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையத்தில் பூமழை தூவி தூவி உற்சாகமான வரவேற்பை வழங்கினர். ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனே போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இந்த வரவேற்பை திகட்ட திகட்ட கொடுத்தனர் தமிழ்நாடு பாஜக மகளிர் அணியினர்.
கோவையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு: கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தார் நிர்மலா சீதாராமன். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது செய்தியாளர்களிடம் அதிமுகவுடனான கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Related Post