சென்னை: விஜய் சொல்வது போலவே கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம் என்றும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கூறினார். மேலும் வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகம் வெளியீடும் விழா நடந்தது. விகடன் நிறுவனமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த விழாவில் புத்தகத்தினை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டார்.
விழாவில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தார். கூட்டணி கணக்குகளை வைத்துக்கொண்டு இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பவர்களுக்கு மக்கள் துணையோடு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும், 2026 தேர்தலில் கூட்டணி எல்லாம் மைனஸ் ஆகிவிடும் என்றும் பேசினார். மேலும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு கூட திருமாவளவன் வராமல் இருப்பதை கூட்டணி அழுத்தம் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இங்கு வரவில்லை என்றாலும் அவரது மனம் இங்கு தான் இருக்கும் என்று விஜய் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சொல்வது போலவே கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம் என்றும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கூறினார். இது தொடர்பாக கேபி முனுசாமி கூறியதாவது:-
"வாரிசு அடிப்படையிலேயே ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். அவர் தனிப்பட்ட உழைப்பின் காரணமாக முதல்வர் பதவிக்கு வரவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு கூட்டணியில் அழுத்தம் இருப்பதை உணருகின்றோம். விஜய் கூறுவது போலவே திருமாவளவனுக்கு கூட்டணியில் ஒரு வித அழுத்த இருப்பது போல் தான் நாங்கள் உணருகின்றோம். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய் விழுப்புரத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி கொள்கைகளை கூறினார். மேலும் யாருடன் போட்டி என்பதை வெளிப்படையாக அறிவித்தார். கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் விஜய் மாநாட்டின் போதே வெளிப்படையாக அறிவித்தார். அதே நேரத்தில் கூட்டணி வருபவர்களை வரவேற்போம் என்றும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கூறினார்.
இது திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நேரடியாக கூட்டணி அழைப்பு விடுத்தது போலவே அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதேபோல் அதிமுக பற்றி விஜய் விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விஜய் அதிமுகவை பற்றி விமர்சிக்காதததும், அதிமுகவும் விஜயை விமர்சிக்காமல் இருப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதலில் திருமாவளவன் - விஜய் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் விஜய் இந்த விழாவில் பங்கேற்பதாக தெரிந்ததும் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நேற்று நடந்த விழாவில் பேசிய விஜய், மீண்டும் திமுகவையும், பாஜகவை விமர்சித்து பேசினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage