சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு உட்பட மூன்று பேர் எதிர் தரப்பு சாட்சிகளாக 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒரே ஒரு சாட்சியை மட்டும் விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எதிர் தரப்பு சாட்சிகள் 9 பேரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நீலகிரி நீதிமன்றம் அனுமதிக்காததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு உட்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரித்தார். அப்போது வழக்கில் மேல்விசாரணை நிலை குறித்து காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று செப்டம்பர் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீபு உள்பட மூன்று பேரின் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்துள்ளார்.