2026 தேர்தலுக்குப் பின் திமுகவுக்கு நிரந்தர வனவாசம்தான்.. போட்டுடைத்த ஜெயக்குமார்

post-img
சென்னை: கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்று ஒட்டுமொத்த ஊழலின் உருவமாக தமிழ்நாட்டை திமுக மாற்றியுள்ளதை மத்திய அரசு கண்டும் காணாமலும் உள்ளதற்கு திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள எழுதப்படாத ஒப்பந்தமே காரணம் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு நிரந்தர வனவாசம்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதாலும் அதிமுகவின் இந்த பொதுக்குழு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பொதுக்குழுவில் 17 தீர்மானங்களும், செயற்குழுவில் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவுடன் திமுகவுக்கு எழுதப்படாத ஒப்பந்தம் போன்று உறவு உள்ளது. முதலில் உதயநிதி பிரதமரைச் சந்தித்து வந்தார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினும் சந்தித்து வந்தார். ஒரு அமைச்சரை பிரதமர் சந்தித்தாக எந்தவொரு வரலாறும் இல்லை. முதலமைச்சர் சந்திப்பதற்காக நேரம் கேட்டால் உடனடியாக பிரதமர் மோடி நேரம் கொடுக்கிறார். உதயநிதி கேட்டாலும் அப்பாயிண்மென்ட் கொடுக்கிறார். இதுவரை திமுக மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்று ஒட்டுமொத்த ஊழலின் உருவமாக தமிழ்நாட்டை திமுக மாற்றியுள்ளதை மத்திய அரசு கண்டும் காணாமலும் உள்ளது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள உறவு எழுதப்படாத ஒப்பந்தம் என்று இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவோடு மைனாரிட்டி அரசாங்கத்தை பாஜக நடத்தி வருகிறது. திமுகவைப் பொருத்தவரையில் 2026 இல் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அடிப்பது அடியுங்கள், நாங்கள் அழுவது போன்று அழுகிறோம் என்பதுபோல திமுகவும், பாஜகவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. 2026க்குப் பிறகு உங்களுடன் நாங்கள் வருகிறோம் என்ற ஒப்பந்தம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக நடக்கும். எம்பி தேர்தலைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின், நாணயத்தின் இரு பக்கங்கள் போல. திமுக 1991 இல் கடுமையான தோல்வி அடைந்தது. 1996 இல் திமுக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, 2001இல் திமுக தோல்வியுற்றது. அதன் பிறகு 2011, 2016 லும் திமுக தோல்வி அடைந்தது. வெற்றி தோல்வி என்பது இயல்பானது. ஜனநாயகத்தில் ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது என்ற வரலாறே கிடையாது. ஆனால், ஒரு சரித்திரத்தைப் படைத்து 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஒரே கட்சி என்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். 53 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் அதிமுக இயக்கம் ஆட்சியமைத்துள்ளது. திமுகவுக்கு கூட அதுபோன்ற எந்தவொரு வரலாறும் கிடையாது. திமுகவில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் கலைஞரும் அமைச்சராக, முதலமைச்சராக இருந்தார். திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியே வந்த பிறகு கருணாநிதி அமைச்சராகவும், முதலமைச்சராகவும் முடியவில்லை. அதன் பிறகு திமுக 13 ஆண்டுகள் வனவாசத்தில் தான் இருந்தன. 2026க்குப் பின்னர் நிரந்தர வனவாசம் திமுகவுக்குதான் என்றார்.

Related Post