சென்னை: விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா திமுக அமைச்சர்கள் பற்றி பல அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது புரியாத புதிராக இருந்துவருகிறது. விஜய்யுடன் அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் மேடையை பகிர்ந்து கொண்டதும் பலரும் தவெகவில் ஆதவ் இணைவார் என்றும் அக்கட்சியின் ஐடி விங்க்கை தலைமை ஏற்று நடத்துவார் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அவர் தனது முடிவை விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சர்ச்சைக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
விசிகவில் அவர் திமுகவை டார்கெட் செய்ததுதான் பிரச்சினையில் போய் முடிந்தது. அவர் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கவில்லை. அவரது விமர்சனம் முழுக்க உதயநிதியை மையப்படுத்தி இருந்தது. அவருக்கு விசிகவில் சீட்டு கேட்கப்பட்ட போது அதற்கு முட்டைக்கடையாக இருந்தது உதய் தரப்புதான் என்றும் சொல்கிறார்கள். அதை மனதில் வைத்தே அவர் உதயை மட்டும் டார்கெட் செய்து வந்தார்.
விசிகவில் அவர் தொடர்ந்து இருந்தால் அந்தக் கட்சிக்கும் தலைமைக்கும் தலைவலியாக 2026இல் இருப்பார் என்று முன்கூட்டியே யூகித்ததால்தான் அவரை 6 மாதம் கட்சியைவிட்டு நீக்க திருமாவளவன் முடிவு செய்தார் என்கிறார். ஆதவ் தனது கட்சிக்கு ஒரு புரவலராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரை கட்சிக்குள் அரவணைத்தார் திருமாவளவன். அதை அக்கட்சியில் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கவுதம சன்னாவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆதவ் அவரே முன்வந்து விசிகவில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இனி திருமாவளவனுக்கும் அவரது கட்சிக்கும் பிரச்சினை இல்லை என அந்தத் தரப்பு நினைத்துக் கொண்டுள்ளது. ஆனால், ஆதவ் வரும் 2026 திமுகவுடன் விசிகவையும் டார்கெட் செய்வார் என்றே அவரை அறிந்த சிலர் சொல்கிறார்கள்.
அவர் விசிகவை விட்டு விலகியதே ஒரு திட்டத்துடன்தான் என்கிறார்கள். முன்பே ஒரு கட்டுப்பாட்டுடன் திமுகவை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தக் கட்டுப்பாடு தற்போது உடைந்துவிட்டது. இனி அவர் திமுகவை இறங்கி அடிக்க முடியும். அதற்காக அறிகுறிகள் இப்போது தெரிய தொடங்கி உள்ளன. அவர் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் மணியுடன் இணைந்து விவாதம் செய்த வீடியோ ஒன்று இப்போது சில அரசியல்வாதிகளில் கண்களை உருத்த தொடங்கி இருக்கிறது.
ஆதவ் பங்கேற்ற அந்த விவாதத்தில் திமுக அமைச்சர்களையும் அதன் தலைமையையும் நேரடியாக விமர்சித்திருக்கிறார். குறிப்பாக வரும் 2026 தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தால், மாஜி அமைச்சர்களாக மாறப் போகும் பலர் பாஜக பக்கம் போய்விடுவார்கள். அதற்காக வாய்ப்பு உள்ளது. அப்போது கட்சியை நிர்வகிக்கும் திறன் இளம் தலைமுறை தலைவருக்கு இருக்காது என்ற தொனியில் பேசி இருக்கிறார்.
"பாஜக ஆட்சியில் ஊழல் என்பது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. 1980களில் இருந்ததைப் போல் இல்லை. அனைத்து கணக்குகளையும் அரசு கண்காணிக்க தொடங்கிவிட்டது. வங்கியில் வைத்துள்ள ஒருவரின் பணம் அவருடையதல்ல, அது அரசுடைய பணம். அது நினைத்தால் எப்போது கணக்கை முடக்கமுடியும். ஈடி ரெய்டு செய்து மிரட்ட முடியும். இன்றைக்கு பாஜகவில் உள்ள 150 எம்பிகள் வேறு கட்சியிலிருந்து மிரட்டி பாஜக பக்கம் வரவழைக்கப்பட்டவர்கள். அவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் கொள்ளையடித்து சொத்து சேர்த்தவர்கள். அதனால் பயந்து பாஜக பக்கம் வந்துவிட்டனர்.
அதேபோல் பல திமுக அமைச்சர்கள் ஊழல் மூலம் பொறியியல் கல்லூரிகளைக் கட்டி அதன் மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். அவர்களின் சொத்து எப்படி வந்தது? டாடா கம்பெனி 3 மாதத்திற்கு ஒருமுறை அவர்களின் வரவு செலவு கணக்கை வெளியிடுகிறது. அதேபோல் தமிழக அமைச்சரவை துறை ரீதியாக வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை. இதை மாற்ற வேண்டும்" என்று Behindwoods O2 பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் கூட்டிக் கழித்து கடைசியில் என்ன சொல்ல வருகிறார் என்றால், ஏக்நாத் ஷிண்டே பாணியில் பாஜகவுக்கு குறைந்த அளவுக்கான இடங்கள் கிடைத்தாலும் அதைக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்கக் குதிரை பேர அரசியலை வரும் 2026 அக்கட்சி செய்யும் என்று சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
அதேபோல், இப்போது திமுக அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கும் கவலை உள்ளது. அவர் 2021 இருந்ததைப் போல் இல்லை. நிறைய மாறி இருக்கிறார் என்று அவர் அதிரடியான கருத்துகளைக் கூறியுள்ளார். ஆக, திமுக வியூக வகுப்பாளராக இருந்த அவர் பல அமைச்சர்களின் நடவடிக்கைகளை நேரிலிருந்து பார்த்து இருக்கிறார். அப்போது நடந்த பல ரகசியங்களை அவர் 2026 தேர்தல் களத்தில் போட்டு உடைப்பார். எப்படிப் பார்த்தாலும் வேல்முருகன், விசிக சீட்டு சர்ச்சை, விஜய் வருகை என 2026 ரகளையான தேர்தல் களமாக இருக்கப் போகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.