நாக்பூர்: இந்தியாவில் 2,000 ஆண்டுகாலமாக ஜாதிய பாகுபாடு இருந்து வருகிறது; சக மனிதர்களை சமூக அமைப்பின் பின்னுக்கு தள்ளி வைத்திருக்கிறோம் என மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஜாதிய கட்டமைப்புக்கும் அடிப்படையானது சனாதன தர்மம். ஆகையால் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது வள்ளுவர் காலம் தொடங்கி இன்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி வரை தமிழ்நாட்டில் எழுப்பப்படுகிற குரல். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து விவாதித்து, சக அமைச்சர்கள் உரிய பதிலடி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: நாம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்கு தள்ளி வைத்திருக்கிறோம். நாம் அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதும் இல்லை. இது 2,000 ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. அவர்களுக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். அதுவரை இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் தொடர வேண்டும். நம் சமூக அமைப்பில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடும் தொடருவது அவசியம். நமது அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தருகிறது.