சென்னை: தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய ஆளுநர் நியமித்துள்ள தேடுதல் குழுவில் வெளிமாநில நபர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆளுநர் ரவி இடம் அளிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவரும் ஆளுநர் தரப்பில் ஒருவரும் இடம்பெறுவர்.
இந்த குழுவினர் தான் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியான 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வார்கள். அவர்களில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்தச் சூழலில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிபந்தனை விதித்திருந்தார்.
துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு.. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி உறுப்பினரை சேர்த்த ஆளுநர் ரவி!
ஆளுநரின் இந்த நிபந்தனைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் எழுதி இருந்த கடிதத்தில், யூஜிசி விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரை ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக யுஜிசி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களோடு 4 பேரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக யுஜிசி பிரதிநிதியான சுஷ்மா யாதவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 பேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆளுநர் ரவி இடமளிக்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage