கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இதெல்லாம் சூப்பராக இருக்கே.. 'ஆனால்' ..

post-img

சென்னை: சென்னையில் புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்று தணிக்கை நடந்தது. இதில் பேருந்துகளில் ஏறுவதற்கு பிரெய்லி பலகைகள் இல்லை, மற்றும் கழிப்பறைகளில் உள்ள வசதிகள் ஊனமுற்றவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறியுள்ளனர்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு நிவாரணம் அளிக்குமா, ஆனால் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ஏற்படுமா என்று சென்னை மக்களிடம் கேட்டால்.. அட போங்கப்பா.. அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கிறார்கள். உண்மையில் புறநகர் ரயில் நிலையம்,மேம்பாலம் உள்பட அடிப்படை வசதிகள் அமைக்ககப்பட்டால் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான முறையில் அமைக்கப்பட்டால் மட்டுமே சென்னை மக்களுக்கு வரமாக இருக்கும் என்கிறார்கள் மக்கள்.


சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 393.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், விரைவில் தென் மாநிலங்களை நோக்கிச் செல்லும் பேருந்து நிலையமாக மாற இருக்கிறது.


பேருந்து நிறுத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கிறதா என்ற தணிக்கை நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினர் நேற்று தணிக்கை நடத்தினர். அப்போது சிஎம்டிஏ அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தார்கள்.


பேருந்து நிலையத்தின் வடிவமைப்பில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாக தணிக்கைக் குழு குற்றம்சாட்டியது. மேலும் பேருந்து நிலையத்தின் தரைப்பகுதி ஆங்காங்கே மேடு பள்ளங்களுடன் இருப்பதாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தொட்டுணரும் வழிகள் இல்லை, மிக நீண்ட மற்றும் இடையில் நிறுத்தமில்லா சாய்தளங்கள் அதிகம் இருப்பது சக்கர நாற்காலிகளில் வருவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தணிக்கை செய்தவர்கள் தெரிவித்தனர்.


மேலும் பல குறைபாடுகளை இந்த குழு சுட்டிக்காட்டியது. 1:12 என்ற விகிதத்தில்தான், சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக 9 மீட்டருக்குத்தான் சாய்தளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு எந்த இடத்திலும் நிறுத்தம் இல்லாமல் தொடர்ச்சியாக 25 மீட்டருக்கு சாய்தளம் அமைக்கப்பட்டிருப்பது. இது சக்கர நாற்காலிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.


தொட்டுணரக்கூடிய பாதை பார்வைக் குறைபாடுள்ள பயணிகளுக்கு பேருந்து நிறுத்துமிடத்துக்கு மட்டும் மட்டுமே வழிகாட்ட உதவுகிறது. பேருந்து நுழைவாயில்கள் குறுகியதாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள், கடைகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ செல்லும் வகையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பேருந்து நிலையத்தை, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றதாக மாற்ற தமிழக அரசு இன்னும் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்க பிரதிநிதியான ஜான்சி ராணி கூறும் போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மிகவும் சாதகமான அம்சம் என்று சொல்வது என்றால், ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதி தான். இதை வேறு எங்கும் பார்த்ததில்லை.


இருப்பினும், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களுக்கான சாய்வுப் பாதை மிகவும் அகலமாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. இது அவர்களுக்கு கடினமாக இருக்கும். இதுதவிர சிஎம்டிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக ஒரு தங்குமிடத்தை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக வீடியோ அழைப்பு வசதிகளுடன் கட்டணமில்லா உதவிகளை வழங்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.


மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் கூட்டணியின் (டிஆர்ஏ) வைஷ்ணவி ஜெயக்குமார் கூறும் போது, ​​பாலீஷ் செய்யப்பட்ட கிரானைட் தரையிறக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழுக்கக்கூடியதாக இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் கட்டப்படுவதை வரவேற்கும் அதே வேளையில், சக்கர நாற்காலிகளை இரு பக்கமாக மாற்றும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

 

 

Related Post