சென்னை: செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு என்றைக்குமே நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய் அவர்களின் அரசியலுக்கு நல்லதல்ல என்று இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில் வைத்துள்ளார். மேலும் ஜனநாயக நாட்டில் மக்களின் ஆதரவு இன்றி ஒருவர் முதல்வர் ஆக முடியாது என்று அமீர் கூறியுள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியிருக்கும் நிலையில் அமீர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
விகடன் நிறுவனமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி,
இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களின் சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே 'மைனஸ்' ஆக்கி விடுவார்கள" என்று பேசினார்.
முன்னதாக விஜய்க்கு முன்பாக பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. மன்னர் பரம்பரையை உருவாக்க தமிழகம் இனி ஒருபோதும் இடம் தராது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதை போல, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்" என்று பேசினார்.
புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஆதவ் ஆர்ஜுனாவின் பேச்சுக்கள் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. விஜய் பேச்சுக்கு திமுக மூத்த அமைச்சர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று விமர்சித்தார். அதே போல ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு காட்டமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறுகிறது. அந்த அறிவு கூட இல்லை அவருக்கு.. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது" என மிகக் கடுமையாக சாடினார்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜய்க்கு நல்லதல்ல என்று நடிகரும், இயக்குநருமான அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில் பதிவு போட்டுள்ளார். இது தொடர்பாக அமீர் கூறியிருப்பதாவது: - ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய் அரசியலுக்கு நல்லதல்ல. செல்வந்தர்களின் திடீர் அரசியல் என்றைக்குமே நன்மை தராது" என்று பதிவிட்டுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage