ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்கு உட்பட்ட கர்மாடான்ட் என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை அன்று திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பலர் திரளாக பங்கேற்றனர். திருவிழா நடைபெற்ற பகுதியில் கடை ஒன்றில் சாட் மசாலா உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சாட் மசாலாவை பலரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதை வாங்கி சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவர்கள் கடும் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியுள்ளனர். வாந்தி, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்கள் வரிசையாக அருகே உள்ள ஷாஹித் நிர்மல் மாதோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில், ஒரு குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
சிகிச்சை பெறும் நபர்களில் குறைந்த வயதை கொண்டவர் பிங்கி குமாரி என்ற 9 வயது குழந்தை. அதிக வயதை கொண்டவர் 44 வயதான விஜய் மாதோ. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், திருவிழா நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவர்களிடம் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.