கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரிலுள்ள பக்த ஜனேசுவரர் கோவிலில் சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், தேர் பாகங்கள் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பழனிவேல் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியே கோவில் பொக்கிஷங்களை திருட துணை போவதா என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரிலுள்ள பக்த ஜனேசுவரர் கோவிலில் சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், தேர் பாகங்கள் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் பழனிவேல் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனை பார்த்த கிராம மக்கள் பொக்கிஷங்களை எடைக்கு போட்டவரை விரட்டி பிடித்ததில், இது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் துணையுடன் நடந்த திருட்டு என தெரிய வந்துள்ளது. அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனாவின், வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால், அவர்களை அதிகாரி மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக இந்து முன்னணி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுந்தரர் வரலாற்றை அழிக்கும் நயவஞ்சகமாக இருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்பே உள்ளன. இவற்றை எல்லாம் கண்டித்து, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாவலூரில் பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் இந்து முன்னணி தலைமையில் கண்களை, வாயை கருப்பு துணி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழக அரசும் காவல்துறையும் கோவில் பொருட்கள் திருடி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.