ஜெயலலிதா சீட்டில் உட்கார்ந்தால் அதே மாதிரி ஆகிடுவீங்களா.. பழனிசாமியை விளாசிய டிடிவி தினகரன்

post-img
திருவண்ணாமலை: “டி.டி.வி தினகரன் செல்லும் கப்பல் விரைவில் மூழ்கிவிடும்” என அதிமுக பொதுச் செயலாளர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டி.டி.வி தினகரன், “மெல்ல மூழ்கி கொண்டிருப்பது பழனிசாமியின் கப்பல் தான். ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்வதாலேயே, அம்மா போலவும் நினைத்துக் கொண்டு கற்பனையில் வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.” என்று விமர்சித்துள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமிக்கு என் பெயரைக் கூட சரியாக சொல்ல தெரியாமல் டி.டி தினகரன் என்று சொல்வார். டி.டி தினகரன் ஒன்றுமில்லை. அவருடன் நான்கு பேர் தான் இருக்கிறார்கள் என்று சொல்வார். இப்போது அமமுக ஒரு கப்பல் என்று சொல்ல தொடங்கியுள்ளார். உண்மையில் மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருப்பது பழனிசாமியின் கப்பல் தான். பத்து தோல்வி பழனிசாமி, அவர் பதவிக்கு வந்து முதலமைச்சரான பிறகு நடந்த ஆர்கேநகர் இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தார். கேட்டால் அம்மாவும் கடந்த காலங்களில் இப்படி செய்துள்ளதாக கூறுகிறார். அம்மாவையும், இவரையும் எப்படி ஒப்பிட முடியும். ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்வதாலேயே தன்னை புரட்சித் தலைவர் போலவும், அம்மா போலவும் நினைத்துக் கொண்டு கற்பனையில் வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார். கட்சிக்கு அபாயம் உள்ளது என்று நான் தொடர்ந்து அங்குள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் கூறி வருகிறேன். கட்சியும், சின்னமும் அவரிடம் இருப்பதால் மட்டுமே அவருக்கு காவடி தூக்கிக் கொண்டிருந்தால் ஏமாந்துவிடுவீர்கள். விழித்துக் கொள்ளுங்கள் என கூறி வருகிறோம். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த முடியும். இதை பொது மக்கள் கூட நன்கு உணர்ந்துள்ளனர். புரட்சித் தலைவர் கண்ட வெற்றி சின்னமான இரட்டை இலையை, பழனிசாமி தன்னை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவின் வெற்றிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுங்கள் என்று சொல்கிறேன். இது பழனிசாமிக்கு என்றும் புரியாது. அவர் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தன்னுடைய சுயநலத்துக்காக புரட்சித் தலைவர் கண்ட இயக்கத்தை அழிக்க பார்க்கிறார். அதை இயற்கை தடுத்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதலமைச்சர் வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2,000 கோடி நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டார். மத்திய குழு வருவதற்கு முன்பே ரூ.1,000 கோடி கொடுத்துவிட்டனர். மத்திய குழு ஆய்வு செய்துவிட்டு சென்று கூடுதல் நிதி கொடுப்பார்கள். ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமில்லை என்றனர். அதன் பிறகு மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வந்துள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் சில விஷயங்கள் கவனம் பெற்றிருக்காது. மற்றபடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி தான் செய்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டுக்கும் எந்த பாரபட்சமும் இல்லாமல் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. வெள்ள பாதிப்புக்கும் மத்திய அரசு உரிய நிதி வழங்குவார்கள். மாநில அரசு முறையான விதத்தில் அதை கேட்க வேண்டும். அதை விட முக்கியமாக அந்த நிதியை முறைகேடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

Related Post