சென்னை : சென்னை மயிலாப்பூரில் கத்தோலிக்க திருச்சபைக்கு தானமாக வழங்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சட்டவிரோதமாக திருச்சபை நிர்வாகிகள் விற்பனை செய்துவிட்டதாக சூளைமேடைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அப்படி சட்டவிரோதமாக விற்பனை செய்த நிலத்தை மீட்கக் கோரியும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் தனது மனுவில், "சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு 1915ஆம் ஆண்டு 75 ஏக்கர் நிலம், மத சேவை செய்ய தானமாக வழங்கப்பட்டிருந்தது.
அது தானமாக வழங்கப்பட்ட நிலம் என்பதால் அதனை யாரும் விற்க முடியாது. இருப்பினும் அதனை சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள். அதேபோல, இரும்புலியூர் கிராமத்தில் உள்ள 53 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மோசடியாக விற்கப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 1.55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தேவாலயம் ஆக்கிரமித்துள்ளது" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, "மயிலாப்பூர் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் இப்படி சட்டவிரோதமாக விற்ற நிலங்களின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஆகும்.. இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் .. இந்த நிலங்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தவும், நிலங்களை மீட்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என எல்சியூஸ் ஃபெர்னாண்டோ அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
எல்சியூஸ் ஃபெர்னாண்டோவின் இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் , கத்தோலிக்க திருச்சபைக்கு தானமாக வழங்கப்பட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்ய போகும் பதில் மனுவில் தான், 5000 கோடி மதிப்புள்ள நிலத்தின் உண்மை நிலை தெரியவரும். ஒருவேளை அந்த நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தால், அந்த நிலத்தை மீட்க கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதேபோல் இரும்புலியூர் கிராமத்தில் உள்ள 53 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் குறித்து வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றியும் அரசு அளிக்கும் பதில் மனுவில் தான் தெரியவரும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage