பிக்பாஸில் சர்ச்சை கருத்து! நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி போலீஸில் புகார்

post-img
காரைக்குடி: நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற டைல்ஸ் குறித்து நடிகரும் போட்டியாளருமான தீபக் தவறான கருத்தை கூறியிருந்தாராம். அந்த கருத்தை ஒளிப்பரப்பியதால் தனியார் தொலைக்காட்சி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த கையால் செய்யப்பட்ட தரை ஓடுகள் என அழைக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமம்தான் ஆத்தங்குடி. இங்கு இரு புறமும் சிறியது முதல் பெரியது வரை டைல்ஸ் கடைகளாகவே காட்சியளிக்கும். உலக புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்களை இங்குள்ள மக்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இயந்திரங்களின் உதவியின்றி முற்றிலும் கைகளால் செய்யப்படும் இந்த டைல்ஸ் , செட்டிநாடு அரண்மனைகளுக்கு அழகு சேர்க்கிறது. இவை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த டைல்ஸில் எண்ணற்ற வண்ணங்கள் , வடிவங்களில் வருகின்றன. உள்ளூர் மண்ணை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இவற்றை காரைக்குடி டைல்ஸ் என்றும் அழைக்கிறார்கள். செட்டிநாடு பகுதிகளில் இந்த டைல்ஸ்கள்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டைல்ஸில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவு என்பது முக்கியம். இல்லாவிட்டால் டைல்ஸ்களில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. டைல்ஸ் கலரை அடரத்தியாக கட்ட வெள்ளை சிமென்ட் 1, ஆக்ஸைடு 1, மணல் 3, கிரே சிமென்ட் 6 பங்கு போட்டு கலப்பார்களாம். அது போல் லைட் நிறமாக வர மணல் 1.5 பங்கும், கிரே சிமென்ட் 3 பங்கும், ஒயிட் சிமென்ட், ஆக்ஸைடு ஆகியவை மேற்கண்ட அளவே சேர்ப்பார்கள்.

Related Post