மும்பை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து மும்பை டிராபிக் போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. இந்த மிரட்டல் மெசேஜ் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். ராஜஸ்தானின் ஆஜ்மீர் பகுதியில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
சமீப காலமாக முக்கிய தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும் பின்னர் சோதனையில் இந்த மிரட்டல்கள் வெறும் புரளி என்பதும் தெரியவருகிறது.
தொடர்ச்சியாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மும்பை போக்குவரத்து போலீசாரின் ஹெல்ப் லைன் எண்ணில் உள்ள வாட்ஸ் அப்புக்கு வந்த மெசேஜில் மிரட்டல் வந்தது. அதில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
ஐஎஸ் அமைப்பினர் 2 பேர் தாக்குதலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மிரில் இருந்து கொலை மிரட்டல் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது மதுபோதையில் இந்த மிரட்டலை பிரதமர் மோடிக்கு மர்ம நபர் விடுத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக மும்பை போலிஸின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பல மிரட்டல்கள் இதுபோல வந்துள்ளன. நடிகர் சல்மான்கான், ஷாருக்கான் போன்ற பிரபலங்களுக்கு போக்குவரத்து போலீஸ் வாட்ஸ்அப் எண்ணிற்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்து இருப்பது நினைவிருக்கலாம்.
Weather Data Source: Wettervorhersage 21 tage