திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. வீடுகளை அலங்கரிப்பதற்காக கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
மேலும், இதற்காக மிகப் பெரிய அளவிலான கேக் வகைகள் மற்றும் வீடு தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண வண்ண அலங்கார நட்சத்திரங்களை தொங்க விட்டும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது.
பிளாஸ்டிக் நட்சத்திரம், பேப்பர் நட்சத்திரம் மற்றும் எல்இடி விளக்குகளால் ஆன நட்சத்திரம் என பல வகைகளில் 10 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கண்ணை கவரும் வகையில் நட்சத்திரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் மரம் ஒரு அடி முதல் 10 அடி வரையிலும் அவை 70 முதல் 4500 ரூபாய் வரை அதனுடைய வித்தியாசத்திற்கு ஏற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இயேசுவின் வாழ்க்கை வரலாறை சொல்லக்கூடிய கிறிஸ்துமஸ் குடில் மற்றும் பொம்மைகள், சாண்டா உடை, முக கவசம், தலைக்கவசம், அலங்கார மணிகள், பந்துகள், கிறிஸ்துமஸ் வாழ்த்து எழுத்துக்கள், டான்சிங் பொம்மைகள், வண்ண வண்ண அலங்கார விளக்குகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் குடில் செட்டுகள் 350 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பொதுமக்களும் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்கி செல்வதாக கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage