டோனை மாற்றிய ரேவந்த் ரெட்டி.. அல்லு அர்ஜுன் வீட்டில் நடந்த சம்பவம்.. ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் உறுதியாம்!

post-img
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் விவகாரத்தில் நேற்று சட்டசபையில் காட்டமாகப் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று அல்லு அர்ஜுன் வீட்டில் நடந்த கல்வீச்சு சம்பவத்தைக் கண்டித்துள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் காவல்துறை கடுமையாக செயல்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கிய இந்தப் படம், PAN India படமாக பல மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி, வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு முந்தைய நாள் இரவு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்புக் காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினரோடு வந்திருந்தார். அதனால், அங்கு ரசிகர்கள் குவிந்தனர். புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு வந்ததால்தான் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் மீது நேற்று சட்டசபையில் பரபரப்பு குற்றம்சாட்டினார். போலீசார் அனுமதி மறுத்தும் ரேவந்த் ரெட்டி அந்த தியேட்டருக்கு வந்ததோடு மட்டும் அல்லாமல், பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார் என்று போலீசார் கூறிய பிறகும், அங்கிருந்து உடனே கிளம்பாமல், ரோடு ஷோ நடத்தினார் எனக் குற்றம்சாட்டினார் ரேவந்த் ரெட்டி. முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இன்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தினர். மேலும், அதோடு கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டை தாக்கினர். அல்லு அர்ஜுன் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறிய போராட்டக்காரர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். பலியான ரேவதி குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்தக் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்துக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். "திரையுலக பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி, நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது" என தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Post