அம்பேத்கரை காங்கிரஸ் புறக்கணித்தது எப்படி? பாஜக பெருமைப்படுத்தியது எப்படி? பட்டியலிட்ட அண்ணாமலை

post-img
சென்னை: ராஜ்யசபாவில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிவிட்டாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை எப்படி அவமதித்தது? பாஜக எப்படி பெருமைப்படுத்தியது? என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பெரிய லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவையும் அவரை விமர்சனம் செய்துள்ளார். ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அதாவது "எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்" என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா உள்ளிட்ட 2 சபைகளிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியது. மேலும் பல இடங்களில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அம்பேத்கரை, அமித்ஷா அவமானப்படுத்தி உள்ளார். அவரை மத்திய அமைச்சரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதோடு அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அண்ணாமலை பதிவு இந்த சர்ச்சைக்கு நடுவே தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி - பாஜக செய்தது என்ன? என்பதை பட்டியலிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத ரத்னா அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி பாரத ரத்னா விருதை வழங்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது 2 பிரதமர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கி உள்ளது. ஆனால் பாஜக ஆதரவில் காங்கிரஸ் இல்லாத மத்திய அரசின்போது அம்பேத்கர் கவுரவிக்கப்பட்டார். அம்பேத்கர் போட்டோ நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் போட்டோவுக்கு காங்கிரஸ் ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் 1990ல் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் அம்பேத்கர் போட்டோ வைக்கப்பட்டது. அப்போது பாஜக ஆதரவில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி நடந்தது. அம்பேத்கர் பிறந்த இடம் அம்பேத்கர் பிறந்த இடத்தை காங்கிரஸ் கட்சி அப்பட்டமாக புறக்கணித்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு 10 ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோதும் அந்த பணி தொடங்கவில்லை. அதேபோல் அம்பேத்கர் தொடர்புடைய இடங்கள் காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டது. மாறாக பிரதமர் மோடி அம்பேத்கரின் நினைவிடம் மற்றும் லண்டனில் உள்ள அவரது இல்லம் உள்பட பஞ்சதீர்த்தங்களை மேம்படுத்தினார். காங்கிரஸ் அம்பேத்கரின் நினைவு சின்னங்களை பராமரிக்க தவறிவிட்டது. பாஜக அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவித்தது. தேர்தலில் தோற்கடித்த காங்கிரஸ் 1952, 1954 ஆகிய ஆண்டுகளில் அம்பேத்கருக்கு எதிராக நேரு வேட்பாளர்களை நிறுத்தி தோற்கடித்தார். ஆனால் ஜனசங்கம் அம்தே்கரை ராஜ்யசபா உறுப்பினராக்க ஆதரவு தெரிவித்தது. ராகுல் காந்தியின் கொள்கை ஆலோசகர் சாம் பிட்ரோடா, ‛‛நமது நாட்டின் நவீன வரலாற்றுக்கு காரணம் காரணம் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் என கூறுவது பொய்யானது'' என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்பேத்கர் நினைவாக அரசியலமைப்பு தினத்தை கொண்டாடி அரசியலமைப்பு புத்தகத்தை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றார்'' என்று கூறியுள்ளார். திமுக மீது தாக்கு மேலும் இந்த பதிவில் அண்ணாமலை திமுகவையும் விளாசியுள்ளார். அதில், ‛‛காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அம்பேத்கரின் வரலாற்றை மறைக்க ஒன்றிணைந்து செயல்பட்டன. இப்போது தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வருவதால் ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை எடிட் செய்து பரப்பி வருகின்றன. திமுக கடந்த காலத்தை மறந்துவிட்டதா? 1987ல் நம்து அரசியல் சட்டத்தை எரித்ததற்காக 10 திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு புனிதமானது? என்று பாடம் எடுக்கின்றனர். என்னை பொறுத்தவரை முருகனுக்கு எவ்வளவு பக்தி உள்ளதோ அதேபோல் அம்பேத்கர் மீதும் பக்தி உள்ளது. எங்களை பொறுத்தவரை அம்பேத்கர் என்பவர் தேர்தலுக்கானவர் அல்ல. அவர் மிகவும் உயர்வான பெருமைக்குரியவர்'' என்று கூறியுள்ளார்.

Related Post