நக்சல்களே இல்லாத தமிழகமாம்.. வெற்றி மாறனை குறி வைக்கும் இந்து மகாசபை! வரிந்து கட்டும் மே 17 இயக்கம்!

post-img
சென்னை: தமிழ்நாட்டில் நக்சல்கள் என்ற இயக்கமே இல்லை; இல்லாத நக்சல்கள் இயக்கத்தை வைத்து விடுதலை 2 படத்தை இயக்கி வெளியிட்டுள்ள திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று இந்து மகாசபை வலியுறுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபை ஆகியவை விடுதலை 2 படத்தை எதிர்ப்பதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இடதுசாரிகள் பார்வையில் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும் படம் விடுதலை-2. அதிதீவிர இடதுசாரியாக இருந்து தமிழ்த் தேசியவாதியாக, தனித் தமிழ்நாடு என்ற தேசம் உருவாக ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் (பெருமாள் வாத்தியார் கதாபத்திரம்) பற்றி பேசுகிறது விடுதலை-2 திரைப்படம். இந்த திரைப்படத்துக்கு இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபை ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து மகா சபை அமைப்பானது தமிழ்நாட்டில் நக்சல்களே இல்லை. நக்சல்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? இல்லாத நக்சல்கள் பற்றி திரைப்படம் எடுப்பது ஏன்? நக்சல்களுக்கும் வெற்றி மாறனுக்கும் என்ன தொடர்பு? வெற்றி மாறனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிறது. இதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறுகையில், நேதாஜியை மனப்பூர்வமாக நேசிப்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், இந்துமகாசபை கட்சிக்காரனெல்லாம் ஆட்டம் போடமுடியுமா? நேதாஜிக்கு எதிராக வெள்ளைக்காரனுக்கு ராணுவத்தை திரட்டிகொடுத்து நேதாஜியின் படையை அழிச்சவனுக தான் இந்த 'இந்து மகாசபா' கட்சிக்காரன். இனிமேலாவது நேதாஜியை நேசிப்பவர்கள் கொஞ்சம் இந்துமகாசபை நேதாஜிக்கு செய்த துரோக வரலாற்றையும் வாசிக்க வேண்டும். ...நேதாஜியை மட்டுமல்ல, காந்தியடிகளையும் கொலை செஞ்ச கோட்சேவும் இந்துமகாசபை கட்சிக்காரன். நரி ஊருக்குள்ள வர்ரதே தப்பு, அது நடுஊர்ல நின்னு ஊளையிடுது என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமான படம் இது. இடதுசாரிய அரசியல் இந்தியாவில் அடைந்த மாற்றங்களும் கொள்கை முரண்களும் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளை தாண்டி இடதுசாரிய கட்சிகள் இருந்தன என்றோ தமிழ்நாடுக்கென ஓர் இடதுசாரி கட்சி இருந்தது என்றோ புலிகளை ஆதரித்து வர்க்கப் புரட்சியுடன் தேசிய இன விடுதலையையும் செயல்திட்டமாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்றோ அவர்கள் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை. ஆயுதங்கள் இன்றிதான் ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி வந்தன என்ற நம்பிக்கையும் பரவலாக இன்று உண்டு. இவை யாவும் இன்று இருக்கிற அரசியல் சூழலில், நேர்ந்திருக்கும் சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மட்டும்தான். இந்திய இடதுசாரிய இயக்கத்தின் வரலாறு இதைக் காட்டிலும் நெடிது. அதை சிதைத்து அழிக்க முயன்ற இந்திய அரசின் வரலாறு அதைக் காட்டிலும் நெடிது. இந்த வரலாற்றைத்தான் விடுதலை 2 சொல்கிறது எனவும் திருமுருகன் காந்தி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Related Post