இஸ்ரோவின் சந்திராயன்-3 (Chandrayaan 3) வெற்றிகரமாக நிலவில் தரை இறக்கப்பட்டது. திட்டமிட்டபடியே பிரக்யான் ரோவர் உடனான விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரை இறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 'சாஃப்ட் லேண்டிங்' செய்த முதல் நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இருப்பினும் இந்த வரலாற்று வெற்றியை.. இந்த உலகளாவிய பெருமையை கொண்டாடி தீர்ப்பதற்கான நேரம் இஸ்ரோவிற்கும் இல்லை, இந்த மிஷனில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திராயன்-3 மிஷனின் "உண்மையான ஆட்டம்" இனிமேல் தான் ஆரம்பம் ஆகிறது!
நிலவில் பத்திரமாக தரையிறங்கியதும், விக்ரம் லேண்டரும் (Vikram Lander) அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் (Pragyan Rover) அடுத்தடுத்து என்னென்ன செய்ய உள்ளன என்பதை பற்றி அறிந்துகொள்ளும் முன்.. மூன் டே (Moon Day) என்றால் என்ன? ஒரு மூன் டே என்றால் பூமியில் எத்தனை நாட்கள் என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பிரக்யான் ரோவர் ஆனது 1 மூன் டே என்கிற காலத்திற்கு தான் நிலவின் தென் துருவ பகுதியை ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய உள்ளது. 1 மூன் டே என்றால்.. அதாவது சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியில் உள்ள 14 நாட்கள் அல்லது 2 வாரங்களுக்கு சமம்.
ஆக அடுத்த 2 வாரங்களுக்கு, இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளின் முழு கவனமும் "வெற்றிக்களிப்பின்" மீது இருக்காது; மாறாக நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மீதும், ஆறு சக்கரங்களின் உதவியுடன் நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யவுள்ள பிரக்யான் ரோவர் மீது மட்டுமே இருக்கும்.
நிலவில் தரை இறங்கியதும் விக்ரம் லேண்டரின் ஒரு பக்க பேனல் (One Side Panel) விரிவடையும். அதனை தொடர்ந்து ஆறு சக்கரங்கள் கொண்ட பிரக்யான் ரோவர் ஆனது கீழே இறங்கி சந்திரனின் மேற்பரப்பில் நகர தொடங்கும் வகையில் ஒரு சரிவு (Ramp) அமைக்கப்படும்.
பிரக்யான் ரோவரின் நகர்வு அல்லது இயக்கம் (Rover's movement) ஆனது விக்ரம் லேண்டரில் உள்ள கண்காணிப்பு சுற்றளவிற்குள் (Observational Radius) தான் இருக்கும். அப்போது தான் விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வழியாக பிரக்யான் ரோவரின் இயக்கத்தை எப்போதும் பார்க்க முடியும்.
சந்திரயான்-3 மிஷன் ஆனது பேலோடுகள் (Payloads) என்று அழைக்கப்படும் சில கருவிகளையும் (Instruments ) தன்னுடன் எடுத்து சென்றுள்ளது. அவைகள் சந்திரனில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கவும், பதிவு செய்யவும் பயன்படுத்தப்படும். அப்படியாக சேகரிக்கப்படும் தகவல்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வு நோக்கங்களுக்காக அனுப்பி வைக்கப்படும்.
சந்திரயான்-3 மிஷனில் மொத்தம் ஆறு பேலோடுகள் உள்ளன. அவைகளில் நான்கு பேலோடுகள் நிலவின் வெப்ப பண்புகள் (Thermal Properties of the Moon), மேற்பரப்புக்கு அருகிலுள்ள பிளாஸ்மாவில் ஏற்படும் மாற்றங்கள் (Changes in Plasma near the Surface), சந்திர நிலநடுக்கங்கள் (Lunar Quakes) மற்றும் பலவற்றை ஆய்வு செய்யும்.
மீதமுள்ள இரண்டு பேலோடுகள் பிரக்யான் ரோவரில் இருக்கும், அவைகள் சந்திர மேற்பரப்பின் ரசாயனம் மற்றும் கனிம கலவை (Chemical and Mineral Composition) பற்றிய தகவல்களை சேகரிக்கப் பயன்படும். நிலவின் தென் துருவமானது நிலவின் இருண்ட பகுதி (Dark Side of the Moon) என்றும் அழைக்கப்படும்.
அப்பகுதியில் உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற தாதுக்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் விளைவாகவே ரஷ்யா, சீனா உட்பட பல உலக நாடுகளிலும் சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் தரை இறங்க போட்டிபோடுகின்றன. ஆனால் இந்த போட்டியில் எந்த ஆரவாரமும் இல்லாமல் இஸ்ரோவும் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளது!