பருத்திமூட்டை குடோன்லயே இருக்கா? அமைதி அண்ணாமலை.. ஸ்பீடு எடப்பாடி பழனிசாமி!

post-img

சென்னை: பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி வரும் நிலையில், சிறுபான்மையின ஓட்டுக்களை முழுவதுமாக பெற முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
தற்போது நடந்து முடிந்துள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக தரப்பில் புது உத்வேகத்தை தந்துள்ளதாக தெரிகிறது.. ஒருபக்கம் மாவட்ட செயலாளர்களுக்கும், மறுபக்கம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் முக்கிய அசைன்மென்ட்களை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.


ரகசிய மேற்பார்வையாளர்கள்: அத்துடன், அனைத்து தொகுதிகளிலும் ரகசிய பார்வையாளர்களை நியமித்து கட்சியினரை கண்காணிக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.. இந்த ரகசிய பார்வையாளர்கள், கிட்டத்தட்ட உளவு பிரிவு காவலர்கள் செயல்பட போகிறார்களாம்.. மேலும், தொகுதி வாரியாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, தலைமைக்கு அதனை அறிக்கையாக அனுப்பவும் முடிவு செய்துள்ளார்கள்.
இதுபோக, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். இந்த சுற்றுப்பயணம்தான், மிகப்பெரிய திருப்பத்தை அதிமுகவுக்கு தேர்தலில் பெற்றுத்தரும் என்கிறார்கள். காரணம், சுற்றுப்பயணத்தில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் நேரடியாக சந்திக்கும்போது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக வலியுறுத்தி சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறும் முயற்சியையும் தீவிரப்படுத்தப்போவதாக சொல்கிறார்கள்.


பாஜக கூட்டணி: அதிமுக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் மக்கள் மத்தியில், நேற்று எடப்பாடி பழனிசாமி பேசும்போதுகூட, "பாஜவுடன் அதிமுக இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்காது என்பதை நீங்கள் ஆணித்தரமாக எடுத்துச்சொல்லுங்கள்.. தெளிவாக எடுத்துக் கூறுங்கள். எம்பி தேர்தலில் மட்டுமல்லாமல், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லுங்கள்" என்று உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.


எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய இந்த நடவடிக்கைகளினால், சிறுபான்மையின மக்களின் கவனம், அதிமுக பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது. எனினும், இவையெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா? என்பதுதான் தெரியவில்லை. இதுகுறித்து நாம் சில அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:
சிறுபான்மையின ஓட்டுக்கள்: "கூட்டணியை முறித்ததாக, அதிமுக அறிவித்து இத்தனை நாளாகியும்கூட, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே தவிர, மோடி, அமித்ஷா பற்றி இதுவரை விமர்சிக்கவில்லை.. பாஜகவின் கொள்கைகள் பற்றியும் விமர்சிக்கவில்லை.. இங்குதான் குழப்பம் வருகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய பேச்சை நம்பி மட்டுமே, சிறுபான்மையினர் ஓட்டுப்போடுவார்களா? என்பது சந்தேகம்தான்.


சாதகமா? பாதகமா: இன்னும் சொல்லப்போனால், திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையின ஓட்டுக்களை எடப்பாடி பழனிசாமி, பிரிக்கும் முயற்சியில் உள்ளதால், இந்த நடவடிக்கைகள் பாஜகவுக்குதான் சாதகமாகி கொண்டிருக்கின்றன. ஆக, சிறுபான்மையின ஓட்டுக்களை அதிமுகவும், இந்துக்களின் ஓட்டுக்களை பாஜகவும் குறி வைத்தே, காய்களை நகர்த்தி வருகின்றன.


அதுமட்டுமல்ல, மேலிட பாஜகவை, இதுவரை அதிமுக விமர்சிக்காத நிலையில், அதிமுகவையும் தமிழக பாஜக இதுவரை விமர்சிக்கவில்லை.. அண்ணாமலை எப்போதுமே இந்த அளவுக்கு அமைதியாக இருப்பவர் கிடையாது.. இந்த அமைதிக்கு பின்னால் உள்ள காரணத்தைதான், உற்று கவனிக்க வேண்டி உள்ளது.


இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. இதுவரை திமுக தரப்பில்தான் ரெயிடுகள் நடக்கிறதே தவிர, கூட்டணியிலிருந்து கழட்டிவிட்ட அதிமுகவை, யாரும் நெருங்கவில்லை.. யாருக்கும் எந்த நெருக்கடியும் இதுவரை தரப்படவில்லை.


திமுக உஷார்: ஒருவேளை தேர்தல் நெருங்கும் நேரத்தில், என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், இப்போதைக்கு, அதிமுகவை டெல்லி மேலிடமோ, டெல்லி மேலிடத்தை அதிமுகவோ, விமர்சிக்காமல் உள்ளனர்.. இரு தரப்புமே குறி வைத்திருப்பது திமுகவின் ஓட்டுக்களுக்கு என்பதால், திமுகதான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்" என்றனர்.

 

Related Post