டெல்லி: மத்திய அரசு நிறுவனமான பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய மின் துறைஅமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limiter or PGCIL) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தான் இந்தியாவின் மின்வினியோகத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் மொத்தம் 425 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன்படி டிப்ளமோ டிரெய்னி(எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு 344 பேர், டிப்ளமோ டிரெய்னி (சிவில்) பிரிவுக்கு 68 பேர், டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங், பவர் என்ஜினீயரிங் (எலக்ட்ரிக்கல்) படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ டிரெய்னி (சிவில்) பணிக்கு டிப்ளமோ சிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன் என்ஜினியரிங் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்டெக், எம்இ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஓராண்டு என்பது பயிற்சி காலமாகும். இந்த வேளையில் மாதம் ரூ.27,500 உதவித்தொகையாக வழங்கப்படும். அதன்பிறகு ஜூனியர் என்ஜினீயர் Gr-IV பிரிவின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.17 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி(நாளை) முதல் செப்டம்பர் மாதம் 23ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.