டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பெரும் பரபரப்பு நிலவுகிறது. இன்று காலை முதலே டெல்லி தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இணைந்து போட்டியிடப் போவதாகவும் காங்கிரஸுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது டெல்லி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை; ஆம் ஆத்மி கட்சி தனித்துதான் போட்டியிடும் என்று அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு தேவை 36 எம்.எல்.ஏக்கள்.
டெல்லியில் 2015-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்றது.பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைக்கவில்லை.
டெல்லியில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியே அமோக வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்கள் கிடைத்தன. பாஜக 8 இடங்களில் வென்றது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் டெல்லி யூனியன் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி vs பாஜக என்ர நிலைமைதான் உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மியிடம் இருந்து தலைநகர் டெல்லியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.
இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி- காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியாக களம் காண பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அத்துடன் 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடையே கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன; இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு 1 முதல் 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன; இதர இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும்; காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.