சென்னை: சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது கார் கடலில் விழுந்தது. கடலில் விழுந்த காரில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கடலோர காவல்படை வீரர் தப்பினார். கார் ஓட்டுநரை 9 மணி நேரமாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் இன்னும் கண்டறியப்படாததால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று அங்கு வந்துள்ளது. இந்த காரில் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார். இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல்படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் சகி காரை ரிவர்ஸ் எடுக்கும் போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்தது.
அப்போது, காரின் கதவை உடைத்து கடலோர காவல்படை வீரர் தப்பியுள்ளார். இருப்பினும் கடலில் இருந்து வெளியே வந்தவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சக கடலோர காவல்படை வீரர்கள் மயங்கிய கடலோர காவல்படை வீரரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் சகியை மீட்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கார் ஓட்டுநர் முகமது சகியை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிரேன் மூலம் கார் தூக்கப்பட்ட நிலையில், அதில், ஓட்டுநர் சகி இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.
கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 மணி நேரமாக ஓட்டுநரை தேடி வருகின்றனர். ஓட்டுநர் குறித்து காவல்துறை உரிய பதில் அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.