திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலமாகும். இங்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருவார்கள். இவர்களுக்காக கொடைக்கானலில் ஏராளமான விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள் உள்ளன. இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று முன்தினம் தங்கும் விடுதியில் இளம்பெண் செய்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. உடன் வந்த வாலிபர் தப்பியோடிவிட்டார்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகைதருகிறார்கள்.. அப்படி வரும் பலர் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து சுற்றி பார்ப்பார்கள். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது மூன்று நாள் தங்கியிருந்து பலர் சுற்றிப்பார்க்கிறார்கள். கொடைக்கானலுக்கு புதிதாக திருமணம் ஆன ஜோடிகள், தேனிலவு தம்பதிகளும் அதிகமாக வருவார்கள்.
கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவருடன் சுற்றுலா வந்தார். அவர்கள் இருவரும் அன்றைய தினம் இரவு கொடைக்கானல் எம்.எம். தெருவில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறை கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் கொடைக்கானல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் இளம்பெண் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவருடன் வந்த இளைஞரை காணவில்லை. இதையடுத்து இளம்பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் விடுதி அறையில் இறந்துகிடந்த பெண் மதுரை மாவட்டம் மேல கள்ளந்திரியை சேர்ந்த பாலுச்சாமி மனைவி மகாலட்சுமி (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என்பதும் தெரியவந்துள்ளது..
இந்தநிலையில் மகாலட்சுமி நேற்று முன்தினம், அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்ற வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்... பின்னர் அவர்கள் இரவு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மகாலட்சுமி தனது தம்பிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறினாராம்.
அதன்பிறகு மகாலட்சுமி விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவருடன் வந்த சசிக்குமார், தனது இருசக்கர வாகனத்தை விடுதியிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனிடையே மகாலட்சுமியுடன் சசிக்குமார் எதற்காக வந்தார் என்பது தெரியவில்லை.. மகாலட்சுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
Weather Data Source: Wettervorhersage 21 tage