மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெடன் ஜாம்பவான் சச்சனின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இப்போது தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரது சிறு வயது நண்பன் வினோத் காம்ளி. இவரும் இந்திய அணிக்காகச் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இருப்பினும், அவரால் சில ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடிந்தது. 52 வயதாகும் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை இப்போது திடீரென பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மகாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள அக்ரிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி போட்டோ மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளால் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார். 1996 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த வினோத் காம்ப்ளி, ஓய்வுக்குப் பிறகு பல்வேறு உடல்நிலை சிகிச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். மேலும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார்.
சமீபத்தில் வினோத் காம்ளி தனது சிறு வயது பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவு நிகழ்ச்சியில் காணப்பட்டார். அப்போதே அவர் பார்க்கப் பலவீனமாகவே இருந்தார். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கரை பார்த்த போது காம்ளி சட்டென உணர்ச்சிவசப்பட்டார். அது தொடர்பான வீடியோவும் கூட அப்போதே வெளியாகிச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் நேர்காணல் ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து காம்ப்ளி பல தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். அதாவது 2013ம் ஆண்டு தனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் பிறகு கடுமையான சிறுநீர் தொற்றும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும், சச்சின் டெண்டுல்கர் தனக்கு பல்வேறு சூழல்களில் நிதியுதவி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "எனக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. என் மனைவி என்னை லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சச்சின் தான் எனக்கு உதவினார். இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு அவர் தான் பணம் செலுத்தினார். ஒரு காலத்தில் சச்சின் எனக்கு உதவவில்லை என நினைத்தேன். ஆனால், அப்போது நான் விரக்தியில் இருந்தேன். என்னால் சரியாக யோசிக்க முடியாமல் இருந்தது. அதன் பிறகு யோசித்த போது தான் அவர் எனக்காக எல்லாவற்றையும் செய்தது தெரிய வந்தது. எங்கள் சிறு வயது நட்பு இன்னும் வலுவாகவே இருக்கிறது" என்றார்.