பட்டாவில் பிழை திருத்தம்.. பத்திரங்களில் "சதுர அடி"? இதென்ன புதுஸ்ஸா? வருவாய்த்துறைக்கு போன கோரிக்கை

post-img
சென்னை: பட்டாக்களில் காணப்படும் பரப்பளவு உள்ளிட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகள், வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதாகவும், இதனால் கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் மெல்ல எழுந்துள்ளன. வீடு, நிலம் போன்றவற்றை சொந்தமாக வாங்கும் உரிமையாளர்கள் கட்டாயம் பெற்றிருக்கவேண்டிய ஆவணம்தான் பட்டா.. இந்த பட்டாவில் நிலத்தின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். எழுத்துப்பிழை: பட்டாவில் எழுத்துப்பிழைகள் இருந்தாலும் சரிசெய்துவிட வேண்டும்.. பெரும்பாலும் தட்டச்சு செய்யும்போது இப்படியான பிழைகள் ஏற்பட்டுவிடும். ஒன்றிரண்டு எழுத்து பிழையே என்றாலும்கூட, பின்னாளில் இதனால் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. அதனால், பத்திரங்களில் உள்ள பிழைகளை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். பெயரில் திருத்தம் செய்வதானாலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்துவிட முடியும்.. சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணமே இதற்கு வசூலிக்கப்படும். அதுமட்டுமல்ல, விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபராலேயே, இந்த பிழை திருத்தம் செய்யப்படும். இப்படி பிழையும் திருத்தப்பட்டு, நம்மிடம் ஒப்படைக்கும் ஆவணத்தின் பெயர்தான், "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள். மேனுவல் முறை: தமிழக வருவாய் துறை நிர்வாகத்தை பொறுத்தவரை, நிலங்கள் தொடர்பான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், பல வருடங்களாகவே மேனுவல் முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2000வது ஆண்டுக்கு பிறகுதான், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.. எனினும், தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்ததில், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர், சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு ஆகிய விபரங்களில் பிழைகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த சில வருடங்களாகவே, பட்டாக்களில், பரப்பளவு உள்ளிட்ட விபரங்கள் பிழையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை நடைமுறைகளின் அடிப்படையில், இதுபோன்ற பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும். பிழைதிருத்தம்: ஆனால், பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த பிழைகளை சரி செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தை கணினி ஏற்கும். எனினும், பட்டாக்களில் காணப்படும் பரப்பளவு உள்ளிட்ட பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகள், வருவாய் துறையில் கிடப்பில் போடப்படுவதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள் பணிச்சுமையை காரணம் காட்டி, இதுபோன்ற பிழைகளை சரி செய்வது தொடர்பான முடிவை எடுக்காமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. பத்திரங்கள்: இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் சொல்லும்போது, "பொதுவாக, பத்திரங்களில் சதுர அடி அடிப்படையிலும், பட்டாவில் ஏர் கணக்கிலும் நிலத்தின் பரப்பளவு குறிப்பிடப்படுகிறது. ஒரு ஏர் என்பது, 1,076 சதுர அடியாகும்.. இதில், சிறிய அளவு வேறுபாடு உள்ளதால், பத்திரத்தை விட பட்டாவில், 50 முதல், 70 சதுர அடி வரை குறைந்து காண வாய்ப்புள்ளது.. இதனை சரி செய்ய வேண்டி விண்ணப்பித்தால், அதில் கோட்டாட்சியர்கள் விசாரணையை உடனடியாக மேற்கொள்வதில்லை.. அதனால், பட்டா பிழைகளை சரி செய்வதில், வருவாய் துறை அதிகாரிகள் கூடுதல கவனம் செலுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post